“அண்ணன் – தம்பி ” பாசம் எங்கே.? விஜயுடன் கூட்டணி.? ஆவேசமான சீமான்.!
2026 தேர்தலில் விஜயுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு , நான் தனித்து போட்டியிடுவேன். என்னுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்க விரும்புபவர்கள் சேரலாம் என சீமான் பதிலளித்துள்ளார்.
சென்னை : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழக வெற்றி க் கழகம் கட்சியுடன் 2026 தேர்தலில் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு , ” நான் தனித்து தான் போட்டியிடுவேன். என்கூட சேர வேண்டும் என நினைப்பவர்கள் தான் அதனை முடிவு ” செய்ய வேண்டும் என விஜய் பெயரை கூட குறிப்பிடாமல் சீமான் ஆவேசமாக பதில் அளித்துள்ளார்.
இதுநாள் வரையில், தம்பி விஜய் எனக் கூறிக்கொண்டிருந்த சீமான், நேற்றைய செய்தியாளர் சந்திப்பில், விஜய் என்ற பெயரைக் கூட குறிப்பிடாமல் சென்றது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் கட்சிக்கொடி விவகாரத்தில், மாநாடு விவகாரத்தில் விஜய் கட்சிக்கு வெளியில் இருந்து வெளிப்படையாக ஆதரவு குரல் தெரிவித்தவர் சீமான்.
விஜயுடன் கூட்டணி என்ற கேள்விகளுக்கு இதற்கு முன்னர் பதில் அளிக்கையில், ” தம்பி விஜய் தான், இந்த அண்ணன் கூட சேருவதற்கு முடிவு செய்ய வேண்டும். அவர் பாணியில் சொல்ல வேண்டும் என்றால், ஐ யம் வெயிட்டிங். த.வெ.க மாநாட்டிற்கு விஜய் அழைத்தால் செல்வேன்.” எனும் அளவுக்கு “அண்ணன் – தம்பி” பாசத்தை த.வெ.க தலைவர் விஜய் மீது வாரி வழங்கினார் சீமான்.
இப்படி இருந்த சமயத்தில், நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் திடீரென “விஜய்” பெயரைக் கூட நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவிக்கவில்லை. 2026இல் த.வெ.க கட்சியுடன் கூட்டணி சேர்வீர்களா என்ற கேள்விக்கு., ” 2026 சட்டமன்ற தேர்தலில் நான் தனித்து போட்டியிடுகிறேன். என்கூட சேர்வதற்கு அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். பூமியின் சொர்க்க பூமியாக இந்த நாட்டை மாற்ற வேண்டும் என நான் நினைக்கிறேன். இவரோடு சேர்ந்தால் அதனை செய்யலாம், அவரோடு சேர்ந்தால் அதனை செய்யலாம் என்று நான் நினைக்கவில்லை.
என்னோடு சேர்ந்தால் நாடு நன்றாக இருக்கும் என நினைப்பவர்கள் யார் வேண்டுமானலும் என்னுடன் கூட்டணியில் சேரலாம். தலைவனுக்கு முதல் தகுதி, மண்ணையும் மக்களையும் நம்ப வேண்டும். நான் நம்புறேன். தனித்து தான் நிற்க போகிறேன்.” என திட்டவட்டமாக கூறினார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு மேலே கால அவகாசம் இருப்பதால், விஜயின் மாநாடு, அவரது கொள்கைகள், அப்போதைய அரசியல் கட்சிகளின் நகர்வு, இதனை பொறுத்து நிச்சயம் 2026இல் இதுவரை நிகழாத பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழும் என்கிறது தமிழக அரசியல் வட்டாரம்.