திமுக தோல்வி பயத்தில் உள்ளது.! தேர்தல் பரப்புரையில் கல்வீச்சு மோதல் குறித்து சீமான் விமர்சனம்.!
நேற்று ஈரோடு கிழக்கு வீரப்பன் சத்திரத்தில் நடந்த கல்வீச்சு தாக்குதல் குறித்து சீமான் கூறுகையில், திமுக தோல்வி பயத்தில் இவ்வாறு செய்கிறது என குற்றம் சாட்டினார்.
நேற்று மாலை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையின் போது நாம் தமிழர் கட்சி மற்றும் திமுக கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. இந்த சம்பவமானது ஈரோடு கிழக்கு வீரப்பன்சத்திரம் பகுதி அருகே காவிரி சாலையில் நடைபெற்றது.
தாக்குதல் வழக்குப்பதிவு : திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் 11 பேர் காயமடைந்தார்கள். மேலும், 3 காவல்துறையினரும் காயம் அடைந்தனர். தற்போது காயமடைந்தவர்கள் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து இரு கட்சியினர் மீதும் காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தோல்வி பயம் : இந்த தாக்குதல் சம்பவம் குறித்து நேற்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், திமுக தோல்வி பயத்தில் இம்மாதிரியான தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடுகிறது என குற்றம் சாட்டினார்.
சீமான் குற்றசாட்டு : மேலும், கூறுகையில் நாங்கள் ஒழுங்காக வாக்கு சேகரித்துக் கொண்டு வந்து கொண்டிருந்தோம். அப்பொழுது எங்களை குறி வைத்து திமுகவினர் தாக்குதல் நடத்துகிறார்கள். முன்கூட்டியே இந்த தாக்குதலுக்கான ஏற்பாடுகளை திமுகவினர் செய்து வந்துள்ளார்கள். கல்லால் அடித்தால் நாங்கள் பயந்து விடுவோமா.? என நினைக்கிறார்கள் என தனது குற்றச்சாட்டையும் சீமான் செய்தியாளர்களிடம் முன்வைத்தார்.