“அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் ”.. ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு!
மாணவர்கள் எழுப்பிய பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் தற்போது காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த சூழலில், ஆளுநர் ஆர்.என்.ரவி அண்ணா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய இன்று தியம் 12.30 மணியளவில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்தார்.
அதன்பிறகு, பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் மூத்த பேராசிரியர்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி பல்கலைக்கழக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் ஆளுநர் மாணவர்களுடன் தனித்தனியாக கலந்துரையாடினார்.
இந்த கலந்துரையாடல் வாயிலாக பல்கலைக்கழக வளாகத்தை மிகவும் பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கு மாணவர்கள் கூறிய கருத்துக்கள், பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளை கேட்டறிந்துள்ளார். இதனைத்தொடர்ந்து, வெளி நபர்கள் நடைபயிற்சிக்காக அண்ணா பல்கலைக்கழகத்துக்குள் வருவதை கட்டுப்படுத்த வேண்டும் எனவும், சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும். எனவும் அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதியது.
அதனைத்தொடர்ந்து, ஆளுநர் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பு மற்றும் நலனே பிரதானமானது என்று கூறியதுடன், மாணவர்கள் எழுப்பிய பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு உத்தரவிட்டதாகவும், அண்ணா பல்கலைகழகத்தில் பயிலும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் இச்சம்பவம் குறித்து அச்சம் அடைய வேண்டாம் என்றும், மேலும் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான பாதுகாப்புச் சூழலை மேம்படுத்திடவும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார் என தமிழ்நாடு ஆளுநர் மாளிகை சார்பில் அறிக்கை வெளியாகியுள்ளது.