ஒரே மேடையில் 234 தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிமுகம் செய்த சீமான்.!
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிமுகம் செய்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை இன்னும் முடிவு பெறாத நிலையில், நாம் தமிழர் கட்சியின் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று ஒரே மேடையில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டது.
இந்த நிலையில், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஒரே மேடையில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இந்த வேட்பாளர்கள் அறிவிப்பில் 50% பெண்கள் 50% ஆண்கள் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் முதல் முறையாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த கூட்டத்தில் பேசிய சீமான், அரசியலை லாபம் பெறும் தொழிலாக மாற்றி விட்டனர். கட்சிகளை குடும்ப சொத்துக்களாக மாற்றி விட்டனர். மாற்றத்திற்கான அரசியலை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கிறது. பெண்களுக்கு 50% கொடுப்பது எங்கள் கடமை. ஆணும், பெண்ணும் சமம் என்பதே எங்கள் கொள்கை என்று கூறியுள்ளார்.