தமிழ்நாட்டைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம்! துணை முதல்வர் உதயநிதி எச்சரிக்கை!

நிதி உரிமையைக் கேட்டால், இந்தியை ஏற்க வேண்டும் என்று தமிழ்நாட்டை மிரட்டுவதா என துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

udhayanidhi stalin angry

சென்னை : மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற காசி-தமிழ் சங்கம் நிகழ்ச்சியில், “புதிய கல்விக் கொள்கையை (NEP) ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி வழங்கப்படும்” என்றும், “மும்மொழிக் கொள்கையை பிற மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளும் போது, தமிழ்நாடு ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை?” எனவும் பேசியது  சர்ச்சையாக வெடித்துள்ளது.

இதனையடுத்து, மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தியை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி கொடுக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி, த.வெ.க தலைவர் விஜய், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்   உள்ளிட்ட பலரும் கண்டனங்களை தெரிவித்திருந்தார்கள்.

அவர்களை தொடர்ந்து துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதி உரிமையைக் கேட்டால், இந்தியை ஏற்க வேண்டும் என்று தமிழ்நாட்டை மிரட்டுவதா? என எக்ஸ் வலைத்தள பக்கத்தில் காட்டத்துடன் தனது கேள்விகளை எழுப்பி கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். அதில்  ” தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது என்பதை நாம் அரசியலால் தூண்டப்பட்டு (Politically Motivated) பேசுவதாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொல்லி உள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.

மொழி, இன உணர்வு வந்தப் பிறகு தான் தமிழர்களுக்கு அரசியலே வந்தது; எங்கள் இடுப்பில் கொள்கை எனும் வேட்டி ஏறிய பிறகு தான், தோளில் பதவி எனும் துண்டு வந்தது. நிதி உரிமையைக் கேட்டால், இந்தியை ஏற்க வேண்டும் என்று தமிழ்நாட்டை மிரட்டுவதா? தமிழ்நாட்டைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம். ரொம்பவும் வேண்டாம் – சுதந்திரத்துக்கு பிறகான தமிழ்நாட்டின் வரலாற்றைப் படித்தாலே இது உங்களுக்குப் புரியும். மாநிலங்கள் சேர்ந்து உருவாக்கியது தான் ஒன்றிய அரசு. எங்கள் குழந்தைகளின் கல்விக்கான நிதியை தான் நாங்கள் கேட்கிறோம். நீங்கள் கொடுக்கும் இடத்திலும் நாங்கள் பெறும் இடத்திலும் இருப்பதாய் நினைத்து தலைக்கனம் காட்ட வேண்டாம். தமிழ்நாடு பொறுக்காது” என காட்டத்துடன் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்