பள்ளிகள் திறப்பு…! வழிபாட்டு தலங்களுக்கு தடை நீட்டிப்பு…!
நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், தமிழக முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பண்டிகைகள் தொடர்ந்து வரும் நிலையில், இதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், பள்ளிகள் திறப்பு மற்றும் வழிபாடு தலங்கள் திறப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது தமிழகத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வண்ணம் அக்டோபர் 31ஆம் தேதி காலை 6 மணி வரை கட்டுப்பாடுகள் அமலில் இருக்குமென்றும், தொடர்ந்து சமுதாய, அரசியல், கலாச்சார நிகழ்வுகள், திருவிழாக்கள், குடமுழுக்கு உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெள்ளி சனி ஞாயிறு ஆகிய நாட்களில் அனைத்து வழிபாட்டு தலங்களும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்றும், நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.