அரையாண்டு லீவு ஓவர்.. இன்று முதல் திறக்கப்படும் பள்ளிகள்!
தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இன்று முதல் விடுபட்ட தேர்வுகள் நடைபெற உள்ளது.
சென்னை : தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையில் அரையாண்டு தேர்வானது கடந்த டிசம்பர் 9ஆம் தேதி முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வானது நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு டிசம்பர் 24 முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டது.
விடுமுறை முடிந்து ஜனவரி 2ஆம் தேதியான இன்று பள்ளிகள் திறக்கும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று சமூக வலைதளங்களில், சில செய்திகள் பரவின. அதில், ஜனவரி 2 (வியாழன்) மற்றும் 3 (வெள்ளி) ஆகிய இரு தினங்கள் மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், அதற்கு விடுமுறை அளித்துவிட்டு, ஜனவரி 6ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கும் என தகவல் பரவியது.
ஆனால் இந்த செய்தியை பள்ளிக்கல்வித்துறை முற்றிலுமாக மறுத்துள்ளது. ஏற்கனவே அறிவித்ததுபோல பள்ளிகள் ஜனவரி 2ஆம் தேதி அன்று தொடங்கும் என விளக்கம் அளித்து இருந்தது. அதன்படி, அரையாண்டு தேர்வு, 9 நாட்கள் விடுமுறை ஆகியவை முடிந்து இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் விடுபட்ட அரையாண்டு தேர்வுகளானது, இன்று முதல் ஜனவரி 10ஆம் தேதிக்குள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.