மாணவர்கள் சாதி, மத அடையாளங்களுடன் பள்ளிக்கு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்
எந்த பள்ளிகளில் சாதி, மத அடையாளங்கள் உள்ளது என கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக பள்ளி கல்வித் துறை அனுப்பிய சுற்றறிக்கையில்,பள்ளிகளில் மாணவர்கள் கையில் கயிறு கட்டுதல் மற்றும் நெற்றியில் திலகமிடுவதை தடுக்க வேண்டும் என்று அனைத்து தலைமைக் கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவுக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச் .ராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.இந்த அறிவிப்பை பள்ளி கல்வி துறை வாபஸ் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
ஆனால் சுற்றறிக்கை தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நேற்று கூறுகையில், .ஏற்கெனவே இருக்கும் நடைமுறை தொடர வேண்டும் என்பதே அரசின் கொள்கை என்று தெரிவித்தார்.மேலும் இது தொடர்பான அறிக்கை தனது கவனத்திற்கும் வரவில்லை என்று கூறினார்.
இந்த நிலையில் இன்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,பள்ளிகளில் சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். எந்த பள்ளிகளில் சாதி, மத அடையாளங்கள் உள்ளது என கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
நேற்று பள்ளிகளில் வழக்கமான நடைமுறைகளே தொடரும் எனக்கூறியிருந்த நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் திடீரென மாற்றி கூறியுள்ளார்.