மாணவிக்கு பாலியல் வன்கொடுமை., போலி NCC முகாம்கள்., மாவட்ட ஆட்சியர் விளக்கம்.!

Krishnagiri Collector Sarayu press meet about School girl Sexual Harassment Issue

கிருஷ்ணகிரி : பள்ளி மாணவிக்குப் போலி NCC முகாமில் நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்த விசாரணை விவரங்களை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு செய்தியாளர்களிடம் கூறினார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார்ப் பள்ளி ஒன்றில் அண்மையில் நடைபெற்ற போலியான என்சிசி முகாமில் சுமார் 17 பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் கலந்து கலந்து கொண்ட 13 வயது பள்ளி மாணவிக்கு போலி என்சிசி பயிற்சியாளரால் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.

இந்த பாலியல் வன்கொடுமை புகாரின் பெயரில் போக்ஸோ பிரிவில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இதுவரையில் 10க்கும் மேற்பட்டோரைக் கைது செய்துள்ளனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமனை நேற்று நள்ளிரவில் கிருஷ்ணகிரி காவல்துறையினர் கைது செய்தனர்.

NCC விளக்கம் :

பாலியல் வன்கொடுமை நடைபெற்றதாகக் கூறப்படும் பள்ளியில் NCC சார்பாக எந்த முகாமும் நடைபெறவில்லை என்று NCC தலைமை தற்போது விளக்கம் அளித்துள்ளது. குறிப்பிட்ட நாளில் எந்தவித NCC முகாமும் கிருஷ்ணகிரியில் நடைபெறவில்லை. இந்த பாலியல் வன்கொடுமை நிகழ்வுக்கும் NCCக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று NCC தலைமை விளக்கம் அளித்துள்ளது.

ஆட்சியர் செய்தியாளர் சந்திப்பு :

பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட  ஆட்சியர் கே.எம்.சரயு செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். அதில், ” தற்போது விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. புகார் வந்ததும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த புகாரை மறைக்க முயன்ற நபர்களையும் நாங்கள் கைது செய்துள்ளோம். போக்ஸோ பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நேற்றுவரை 9 பேர் கைதாகினர். இன்று முக்கிய குற்றவாளி (சிவராமன்) உட்பட 3 பேர் கைதாகி உள்ளனர்.

இவர்கள் போலியான சான்றிதழ் கொண்டு NCC முகாம்கள் நடத்தி வந்துள்ளனர். இவர்கள் எந்தெந்த பள்ளிகளில் முகாம்கள் நடத்தி உள்ளனர் என விசாரணை செய்து வருகிறோம். சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் அந்த போலி NCC நபர்களைப் பின்புலம் பரிசோதிக்காமல் முகாம் நடத்த அனுமதித்துள்ளனர். பள்ளிக்கல்வித்துறையால் கூறப்பட்டுள்ள எந்த விதிகளையும் பள்ளி நிர்வாகம் முறையாகப் பின்பற்றவில்லை.

இதே முகாமில் கலந்து கொண்ட மற்ற மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடமும் நாங்கள் விசாரணை செய்து வருகிறோம். இம்மாதிரியான சம்பவங்கள் நேர்ந்தால் உடனடியாக அரசு உதவி எண் 1098 என்ற எண்ணை உடனடியாக அழைக்க வேண்டும்.” என்று மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்