வாரத்தில் 6 நாட்களுக்கு 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி செயல்படும் – அமைச்சர் செங்கோட்டையன்!
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் போடப்பட்ட ஊரடங்கு முதல் தற்போது வரை மாணவர்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் தான் இருக்கிறது. இடையிடையே ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்கள் பாடங்கள் பயின்று வந்தாலும் தற்போது தான் நேரில் பள்ளிக்கு சென்று பாடங்கள் பெறுவதற்கான அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு 92 சதவீத மாணவர்கள் வருவதாகவும் மீதமுள்ள மாணவர்கள் ஆசிரியர்கள் மூலம் பள்ளிக்கு அழைக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
பள்ளி முடிந்ததும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நாள்தோறும் ஆன்லைனிலும் நீட் தேர்வுக்கான பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன், ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான் விடுமுறை எனவும், அதுதவிர அரசு விடுமுறை நாட்களில் அறிவிக்கப்பட கூடிய விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் எல்லாம் 10 மற்றும் 12ஆம் வகுப்புக் மாணவர்களுக்கான பள்ளி செயல்படும் எனவும், சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பொது தேர்வுக்கான தேதி மற்றும் அதற்கான அட்டவணை வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.