இலவச மடிக்கணினி திட்டம் ரத்தாகவில்லை – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் ரத்தாகவில்லை என அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு மடிக்கணினி என்பது பல காலமாக கனவாகவே இருந்து வந்த நிலையில், அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை கடந்த அதிமுக ஆட்சியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
அதன்படி, 2011 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த அதிமுக அரசு அந்தாண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தது. மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில், முதற்கட்டமாக 9.12 லட்சம் மாணவர்களுக்கு 912 கோடி செலவில் இலவச மடிக்கணினி வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, படிப்படியாக அடுத்தடுத்த ஆண்டுகளிலும் மடிக்கணினி வழங்கப்பட்டு வந்தன.
இந்த சமயத்தில், கடந்த சில ஆண்டுகளாக லேப்டாப் தயாரிக்கும் நிறுவனங்கள் அரசின் கொள்முதல் விலைக்கு டெண்டர் எடுக்க வர முற்படாததால், இலவச லேப்டாப் வழங்குவதில் சிக்கல் எழுந்தது. இதனால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு Laptop வழங்கும் திட்டம் ரத்தாகுமா என்று மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு Laptop வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படாது. ஆனால், பல்வேறு சிக்கல்கள் உள்ளன.
சிக்கல்களுக்கு தீர்வு கண்டு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவோம். இதனால் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் ரத்து செய்யவில்லை. நிதிநிலையை ஆராய்ந்து படிப்படியாக மடிக்கணினி வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். அமைச்சரின் இந்த தகவலால் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு சற்று தீர்வு கிடைத்துள்ளதாகவே கூறப்படுகிறது.