மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணி நேரம் நிர்ணயம் – தமிழக அரசு
தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணி நேரம் நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு மருத்துவத் துறை அனைத்து ஊழியர் மற்றும் சுகாதாரப் பணியாளர் சங்கம், மதுரை, மருத்துவத் துறையில் பணியாற்றும் அடித்தளப் பணியாளர்களின் பணி நேரத்தினை 8 மணி நேரமாக நிர்ணயம் செய்து ஆணையிடக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணி நேரம் நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை, மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை என்கிற முறையில் சுழற்சி பணியாக வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பணியில் உள்ள கடைநிலை ஊழியர்களான செவிலிய உதவியாளர் மருத்துவமனை பணியாளர் மற்றும் துப்புரவுப் பணியாளர்களில் 50 சதவீதம் பேர் முதல் சுழற்சியிலும், 25 சதவீதம் பேர் இரண்டாம் சுழற்சியிலும் மற்றும் 25 சதவீதம் பேர் மூன்றாம் சுழற்சியிலும் பணியமர்த்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.