தமிழகத்தில் 6.23 கோடி வாக்காளர்கள்… இதுவரை 70 கோடி… சத்யபிரதா சாகு!

Satyabrata Sahoo

Satyabrata Sahoo: தமிழகத்தில் 6.23 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டியளித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் சமீபத்தில் தொடங்கிய நிலையில், இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதனால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று விறுவிறுப்பாக தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்த தகவல்களை வெளியிட்டார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் 6.23 கோடி வாக்காளர்கள் மக்களவை தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியலின் படி தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள் இருந்தனர். தற்போது 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள் என 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில், மூன்றாம் பாலினத்தவர்கள் 8,465 பேர் அடங்குவர். கடந்த 2 மாதங்களில் மட்டும் 5 லட்சம் பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்ந்துள்ளனர்.

80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 6.13 லட்சம் பேர்  தபால் மூலம் வாக்களிக்கலாம். இதுவரை 68,144 வாக்கு மையங்கள் இருக்கும் சூழலில், தற்போது கூடுதலாக 177 வாக்குச்சாவடிகளை அமைக்கத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் 7 லட்சம் பேர் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். தேர்தல் அலுவலர்களுக்கு ஏப்ரல் 7ம் தேதிக்குள் 2ம் கட்ட பயிற்சி அளிக்கப்படும்.

தமிழ்நாட்டில் 117 தேர்தல் பார்வையாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். அதன்படி, 39 பொது பார்வையாளர்கள், 20 காவல் பார்வையாளர்கள், 58 செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் 191 கம்பெனிகளை சேர்ந்த மத்திய பாதுகாப்பு படை தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு இதுவரை சுமார் ரூ.70 கோடி மதிப்புள்ள பணம், தங்கம் மற்றும் மதுபானம் உள்ளிட்ட பிற பொருட்கள் தேர்தல் பறக்கும் படை மூலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  எனவே, தேர்தல் விதிமீறல் பற்றி புகார் அளிப்பவர்கள் தங்கள் விவரத்தை மறைத்துவிட்டு புகார் அளிக்கலாம் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்