மருத்துவமனையை உல்லாசவிடுதியாக்கிய சசி குடும்பம்…! ரூ.1 கோடிக்கு மேல் இட்லி, தோசை சாப்பிட்டது சசி குடும்பம்…!அமைச்சர் சி.வி.சண்முகம் பரபரப்பு தகவல்
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது உறுதியாகி உள்ளது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. விசாரணை செய்வதற்காகத் தமிழக அரசு 25.09.2017 அன்று, ஓய்வு பெற்ற நீதிபதி அ.ஆறுமுகசாமி-யைக் கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை நியமித்தது.அதன் பின்னர் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்போலோ நிர்வாகம் செலவுக் கணக்கை தாக்கல் செய்தது.சசிகலா குடும்பத்தினர் தங்கிய அறைக்கான வாடகை மட்டும் 1.24 கோடி .அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதாவுக்கு 75 நாளில் உணவுக்காக ரூ. 1.17 கோடி செலவாகியது என்று தாக்கல் செய்தது.
இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது எங்களை யாரும் பார்க்க அனுமதிக்கவில்லை. மருத்துவமனையில் ரூ 1 கோடிக்கும் மேல் உணவு சாப்பிட்டது யார்? ….மருத்துவமனையை உல்லாசவிடுதியாக்கி தங்கி ரூ.1 கோடிக்கு மேல் இட்லி, தோசை சாப்பிட்டது சசிகலா குடும்பம் .சசிகலா தவிர அவரது குடும்பத்தினர் அனைவரையும் ஜெயலலிதா ஒதுக்கி வைத்திருந்தார்.
ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்து சென்று சிகிச்சை அளிப்பதை தடுத்திருக்கிறார்கள். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது உறுதியாகி உள்ளது.
ஜெயலலிதா மரணம் குறித்து அரசு, சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரிக்க வேண்டும். சந்தேகத்திற்கு இடமான மரணம் என வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்டவர்களை விசாரிக்க வேண்டும் என்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.