“ஒன்றாக இணைந்து ஆட்சி”..அதிமுக அணிகள் இணைப்பு பற்றிய கேள்விக்கு சசிகலா சொன்ன பதில்?
அதிமுக அணிகள் இணைப்பு பற்றி தொண்டர்களின் முடிவே இறுதியானது என சசிகலா தெரிவித்துள்ளார்.

சென்னை : அதிமுக கட்சியில் கடந்த சில ஆண்டுகளாகவே குழப்பங்கள் நடந்து வருகிறது. முன்னாள் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா, கட்சியின் அணிகள் இணைப்புக்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். ஒன்றாக இணைப்பதற்கு ஓ. பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்) அணிகள் இணைப்பை ஆதரிப்பதாகவும் கருத்து தெரிவித்தார்.
இருப்பினும் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இ.பி.எஸ்), “அதிமுகவில் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று திட்டவட்டமாகவே தெரிவித்திருந்தார். இந்த சூழலில், அணிகள் இணைப்புகுறித்து சமீபத்தில் சசிகலா கருத்து தெரிவித்து பேசியிருக்கிறார்.
நேற்று சசிகலா, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த சந்திப்பின் போது சசிகலாவின் சகோதரர் திவாகரனும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனும் கலந்து கொண்டார்கள். சந்தித்தபிறகு வெளிய வந்து செய்தியாளர்களுக்கு சசிகலா பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர் ” அதிமுக அணிகள் இணைப்பு குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த சசிகலா ” அனைவரும் ஒன்றாக இணைந்து வருகின்ற 2026- சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சியை அமைப்போம். அதற்கான நடவடிக்கைகளை நிச்சயமாக எடுப்போம். அதிமுக அணிகள் இணைப்பு பற்றி தொண்டர்களின் முடிவே இறுதியானது” என பதில் அளித்தார்.
ஏற்கனவே, 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதன் காரணமாக அதிமுக ஒன்றிணைவதற்கான வேலைகள் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகி கொண்டு இருக்கும் சூழலில்,ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான வைத்திலிங்கத்தை டிடிவி தினகரன், சசிகலா நேற்று சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காகவும் மாறியுள்ளது.