அரசியலிலிருந்து ஒதுங்கிய சசிகலா – ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு.!

Default Image

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இன்று அதிகாலையில் நடைபெற்ற பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்த சசிகலா.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பிரதான கட்சிகளான அதிமுக, திமுக அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இதனிடையே பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையாகி வந்த சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக கூறினார். ஆனால், காலசூழ்நிலை   மற்றும் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், நேற்று சசிகலா நாகையில் 3 மும்மத வழிபாடுகளை முடித்துக் கொண்டு, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ராமநாதபுரத்திற்கு வருகை புரிந்தார். இராமநாதபுரம் மாவட்ட எல்லையில் அவருக்கு, ராமநாதபுரம் அமமுக வேட்பாளர் முனியசாமி மற்றும் திருவாடானை அமமுக ஆனந்த் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து இன்று காலை ராமேஸ்வரம் கோவிலில் நடைபெறும் ஸ்படிக லிங்க பூஜையில் கலந்து கொண்டு ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தி சாமி தரிசனம் செய்துள்ளார். சசிகலா வருகையையொட்டி திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் ஆனந்த், முன்னாள் அமைச்சர் வாக்கி நடராஜன் மற்றும் கட்சி தொண்டர்கள் கோவிலில் குவிந்தனர்.

ஒருபக்கம் முதல்வர் பழனிசாமி 234 தொகுதிகளிலும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மறுபக்கம் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா, தற்போது கோவில் கோவிலாக சென்று தனது ஆன்மிக பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்