ஓபிஎஸ் – ஈபிஎஸ்க்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு எதிர்ப்பு !உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் சீராய்வு மனு தாக்கல்
ஓபிஎஸ் – ஈபிஎஸ்க்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இரட்டை இலைச் சின்னத்திற்கு ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் தரப்பும் சசிகலா தரப்பும் போட்டிபோட்டது.
இதைத்தொடர்ந்து இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இரட்டை இலைச்சின்னத்துக்கு உரிமை கோரி சசிகலா தரப்பும் ஓபிஎஸ் தரப்பு மாறி மாறி பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தன. இந்நிலையில் தேர்தல் ஆணையம் இரட்டை இலைச்சின்னத்தை ஓபிஎஸ் தரப்புக்கு ஒதுக்கியது. தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து சசிகலா, டிடிவி தினகரன் தரப்பினர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலையை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது செல்லும் என்று தீர்ப்பளித்தது.அதாவது இரட்டை இலை சின்னத்தை ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் வழங்கியது சரியே என தீர்ப்பளித்தது டெல்லி உயர்நீதிமன்றம்.அதேபோல் தினகரன் – சசிகலா தரப்பு மனு தள்ளுபடி செய்தது.
பின் இரட்டை இலை வழக்கில் டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தினகரன் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
.
அதன்படி உச்சநீதிமன்றத்தில் தினகரனின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வந்தது.அதில் இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்புக்கு ஒதுக்கியதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.அதேபோல் தினகரனின் கோரிக்கை நிராகரித்தது உச்சநீதிமன்றம். இந்த தீர்ப்பு தினகரன் – சசிகலா தரப்பிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
ஆனால் தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.ஆனால் தேர்தலில் போட்டியிட தினகரனின் அமமுகவிற்கு குக்கர் சின்னம் வழங்கப்படவில்லை.அந்த சமயத்தில் தேர்தல் ஆணையம் அமமுக கட்சி அங்கிகரிக்கப்படாத கட்சி ,எனவே வேட்பாளர்கள் அனைவரும் சுயேட்சை வேட்பாளர்களாகவே கருதப்படுவார்கள் என்று தெரிவித்தது. மாறாக பலகட்ட போராட்டத்திற்கு பின்னர் பரிசு பெட்டி சின்னம் வழங்கப்பட்டது.அதன்படி தேர்தலிலும் போட்டியிட்டது அமமுக.
அதேபோல் மேலும் அதிமுக மீதான உரிமை கோரும் வழக்கை சசிகலா நடத்த இருக்கிறார் என்ற காரணத்தால் அமமுகவின் பொதுச்செயலாளராக தினகரன் பதவி ஏற்றார். தற்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை கட்சியாக பதிவு செய்தார் தினகரன்.
இந்நிலையில் ஓபிஎஸ் – ஈபிஎஸ்க்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சசிகலா சார்பாக வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் வழக்கு தொடர்ந்துள்ளார்.