திமுக அமைச்சர்களுக்கு சசிகலா கண்டனம்!
திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் பெண்களை இழிவுபடுத்தி பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என சசிகலா கண்டன அறிக்கை.
இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், திமுக ஆட்சியில் என்றைக்குமே பெண்களுக்கு பாதுகாப்பும் இருந்ததில்லை, மரியாதையும் கிடைப்பதில்லை என்பதை திமுகவினரே தொடர்ந்து அதை திரூபித்து வருகிறார்கள். சமீபத்தில் திமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் வாய்க்கு வந்தபடி பெண்களை இழிவுபடுத்தி பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. திமுக அமைச்சரோ ரூ.4,000 மக்களுக்கு தந்ததாக சொல்கிறார், முதலில் இவர்களிடம் யார் கேட்டார்கள் என்று தெரியவில்லை. இவர்கள் மக்களை ஏமாற்றி எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்று பல பொய் வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு, நிறைவேற்ற முடியாமல் மக்களை ஆறுதல்படுத்தும் விதமாக நீங்களாக கொடுத்தீர்கள்.
அப்படியே கொடுத்தாலும் அமைச்சர்கள் அவர்களுடைய வீட்டிலிருந்து கொண்டு வந்து கொடுக்கவில்லை. மக்களின் வரிப் பணத்திலிருந்துதான் கொடுக்கிறார்கள். அதேபோன்று திமுக அரசு பெண்களுக்கு கட்டணம் இல்லாமல் பேருந்து பயணம் என்று அறிவித்துவிட்டு, பெயரளவில் ஒரு சில பேருந்துகளில் மட்டும் இந்த கட்டண சலுகையை அளித்து, அந்த குறிப்பிட்ட பேருந்துகளும் அங்கொள்றும் இங்கொன்றுமாக எப்பொழுதாவது இயக்கப்படுகிறது. ஆனால் திமுக அமைச்சரோ பெண்களை இழிவுபடுத்தி வாய்க்கு வந்ததை பேசுகிறார்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு பயனவிக்கும் வகையில் விலையில்லா திட்டங்களை மக்களுக்கு கொடுத்தார்கள். ஆனால் எத்த ஒரு திட்டத்திற்கும் ‘இலவசம்’ என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது, அதற்கு மாறாக ‘விலையில்லா என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்று நடைமுறைப்படுத்தினார்கள். எதற்காக இவ்வாறு செய்தார்கள்? அதாவது ஒரு பயனாளிக்கூட தங்களை தாழ்வாக எண்ணிவிடக்கூடாது என்று தாயுள்ளத்தோடு நினைத்தார்கள். மேலும், எந்த ஒரு அரசாங்கமும் இலவசமாக எந்த பொருளையும் யாருக்கும் கொடுத்திட முடியாது. ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு ஆதார விலை இருக்கிறது.
அந்த குறிப்பிட்ட திட்டத்திற்க்கு ஆகும் செலவை, அரசாங்கம் மக்களுடைய வரிப்பணத்தை பயன்படுத்திதான் ஈடுகட்டுகிறது. இலவசம்’ என்ற வார்த்தையை நீக்கிவிட்டு ‘விலையில்லா’ என்று திட்டங்களுக்கு பெயரிட்டு செயல்படுத்த அறிவுறுத்தினார்கள். ஆனால், திமுகவைச் சேர்ந்த அமைச்சர்களோ ஏதோ தங்கள் சொந்த பணத்தை செலவழிப்பதாக நினைத்துக்கொண்டு, பேருந்து கட்டணம் இல்லாமல் பெண்கள் பயணம் செய்வதை குறிப்பிட்டு, நாகரீகமற்ற முறையில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பொது மேடையில் பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. அதேபோன்று திமுகவின் மற்றொரு மூத்த அமைச்சரோ இப்பதான் நாங்க சில்லறை மாத்தப்போறோம் வந்ததும் பெண்களுக்கு 1,000 ரூபாய் கொடுப்பதாக பொதுமேடையில் ஏளனமாக பேசி இழிவுபடுத்துகிறார்.
இதுபோன்று திமுகவினரின் இழிவான பேச்சுக்களை தாங்கிக் கொள்ள முடியாத கோவையை சேர்ந்த ஒரு தாய் பேரூந்தில் பயணம் செய்ய நடத்துனரிடம் காசு கொடுத்து பயணம் செய்து இருக்கிறார். இந்த திமுக அமைச்சர்களுக்கு இதைவிட சரியான பாடத்தை யாராலும் கொடுத்து இருக்க முடியாது. ஏழை எளியவர்களாக இருந்தாலும் தன்மானம் கௌரவம் உள்ளவர்கள் தமிழக மக்கள் என்பதை திமுகவினர் புரித்துகொள்ள வேண்டும். திமுகவினரும் பெண்ணின் வயிற்றிலிருந்து தான் பிறந்துள்ளார்கள். இவர்கள் ஏதோ வானத்தில் இருந்து குதித்தவர்கள் இல்லை என்பதை மனநில் வைத்து கொண்டு இனிமேலாவது பொது இடங்களில் பேசும்போது பெண்களுக்கு உரிய மதிப்பளித்து பேசவேண்டும் இதுபோன்று நடந்து கொள்பவர்களை திமுக தலைமை கண்டிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
— V K Sasikala (@AmmavinVazhi) September 29, 2022