சசிகலா சம்பந்தப்பட்டவர்கள் மீது பாயும் நடவடிக்கை!
சசிகலா மீது ஜெயலலிதா மரணம் குறித்து புகார் அளித்தவர்களிடம் குறுக்கு விசாரணை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம், சசிகலா தரப்பினர் தங்களிடம் உள்ள ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு சம்மன் அனுப்பியிருந்தது. இதையடுத்து, சசிகலா சார்பில், விசாரணை ஆணையத்தில் ஆஜரான வழக்கறிஞர், ஜெயலலிதா மரணம் தொடர்பாக, சசிகலா மீது புகார் அளித்தவர்களிடம் தங்கள் தரப்பு குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்றும், அவர்களின் பெயர் பட்டியலை தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, மருத்துவர் சிவக்குமார், அரசு மருத்துவர் பாலாஜி, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆகியோரைத் தவிர, கடந்த ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி முதல் தற்போது வரை சசிகலா மீது புகார் கூறியவர்களின் பட்டியலை தரத் தயார் என ஆறுமுகசாமி ஆணையம் கூறியுள்ளது.
மருத்துவர் சிவக்குமார், அரசு மருத்துவர் பாலாஜி, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆகியோரிடம் விசாரணை முழுமை அடையவில்லை என்று கூறியுள்ள ஆறுமுகசாமி ஆணையம், இனிமேல் விசாரணை நடக்கும்போது, சசிகலா மீது குற்றஞ்சாட்டுவோரின் தகவல்களையும் தரத் தயார் என்று தெரிவித்துள்ளது.
மேலும் சசிகலாவுக்கு புதிதாக சம்மன் அனுப்பப்படும் என்று கூறியுள்ள ஆறுமுகசாமி ஆணையம், சம்மன் கிடைத்த 7 நாட்களில் ஜெயலலிதா மரணம் தொடர்பான தகவல்கள், ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.