ஆதியோகி சிவன் சிலை முன்பு 7 உபாசகர்களால் நடத்தப்பட்ட ‘சப்தரிஷி ஆரத்தி’..!
கோவை:அகஸ்தியர் ஜெயந்தியை முன்னிட்டு ஆதியோகி சிவன் சிலை முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு காசியைச் சேர்ந்த 7 உபாசகர்கள் நேற்று (டிச 23) சப்தரிஷி ஆரத்தியை சிறப்பாக நடத்தினர்.
கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில்,ஈசாவில் 112 அடியில் ஆதியோகியின் மார்பளவு சிலைக்கு,சக்தியளிக்கும் விதமாக,யோகேஸ்வர லிங்கத்தை,சப்தரிஷிகளின் உருவங்களுடன் சத்குரு பிரதிஷ்டை செய்து உள்ளார்.இதனையடுத்து,வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலில் பல நூறு வருடங்களாக நடத்தப்பட்டு வரும் சப்தரிஷி ஆரத்தியானது,அதற்கு அடுத்தப்படியாக ஆதியோகியில் தான் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது .
இந்நிலையில்,அகஸ்தியர் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று (டிச 23) ஆதியோகி சிவன் சிலை முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு காசியைச் சேர்ந்த 7 உபாசகர்கள் சப்தரிஷி ஆரத்தியை சிறப்பாக நடத்தினர்.இதற்காக,அவர்கள் 7 பேரும் காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து ஈஷாவிற்கு வருகை தந்தனர்.
அதன்படி,சப்தரிஷி ஆரத்தியின்போது யோகேஷ்வர லிங்கத்தை 7 உபாசகர்களும் சுற்றியமர்ந்து சந்தனம்,வில்வம்,புனித நீர்,மலர்கள் போன்ற பல்வேறு மங்கள பொருட்களால் லிங்கத்தை அலங்கரித்து,பின்னர் மந்திரங்கள் கூறி சப்தரிஷி ஆரத்தி நடத்தினர்.மாலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த செயல்முறை 8 மணி வரை நிகழ்ந்த இந்த செயல்முறை சக்தி நிலையில் பிரம்மாண்ட தன்மையை அந்த தருணத்தில் உருவாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த சப்தரிஷி ஆரத்தியானது சிவன் தனது ஏழு சீடர்களான சப்தரிஷிகள், அவரது அருளைப் பெறுவதற்காக அவர்களுக்கு கற்றுக்கொடுத்த சக்திவாய்ந்த செயல்முறையாகும்.
சப்தரிஷி ஆரத்தியின் முக்கியத்துவம் என்பது,அகஸ்தியர் உள்ளிட்ட சப்தரிஷிகள்,யோக விஞ்ஞானத்தை பரப்ப உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றதகவும்,செல்வதற்கு முன், ‘சிவனை இனி நேரடியாக காண முடியாதே’ என்ற ஏக்கத்தை அவரிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.இதனால்,சிவன் இந்த சப்தரிஷி ஆரத்தி என்னும் செயல்முறையை வழங்கி,அதன் மூலம் தன் இருப்பையும்,அருளையும் உணர்த்துவதற்கு வழிவகுத்தார் என்று நம்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.