#BREAKING: மக்கள் நீதி மய்யத்தில் இருந்து சந்தோஷ் பாபு, பத்மபிரியா விலகுவதாக அறிவிப்பு..!

Default Image

முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ் பாபு மற்றும் பத்மபிரியா இருவரும் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகல்.

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியைச் சந்தித்தது. அதிலும், கூட்டணி கட்சிகளான சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே கட்சிகளும் படுதோல்வி அடைந்தன.

மநீம தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் நீண்ட இழுபறிக்கு பிறகு பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் தோல்வியைத் தழுவினார். இதற்கிடையில், கடந்த வாரம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவர் மகேந்திரன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், மதுரவாயல் தொகுதியில் மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிட்டு 33401 வாக்குகளைப் பெற்று 3-ம் இடம் பிடித்தவரும், கட்சியின் சுற்றுசூழல் பிரிவு மாநில செயலாளராக இருந்தவருமான பத்மபிரியா அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பத்மபிரியா தனது ட்விட்டரில், அன்பு நிறைந்த மதுரவாயல் தொகுதி மக்களுக்கு என் மீது நம்பிக்கை கொண்டு எனக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். என்னைப் போல் எவ்வித அரசியல் பின்புலம் இல்லாத ஒரு நடுத்தர குடும்பப் பெண்ணை உங்கள் வீட்டுப்பிள்ளையாக எண்ணி ஏற்றுக்கொண்டு வாக்களித்தமைக்கும் நம்பிக்கை கொடுத்து ஊக்கம் கொடுத்தமைக்கும் நான் என்றும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளேன்.

சில காரணங்களுக்காக நான் சார்ந்திருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். அதை எனது தொகுதி மக்களான உங்களுடன் பகிர்வது எனது கடமை என்று கருதி தெரிவித்துக்கொள்கின்றேன். எனது களப்பணி எப்போதும் போல இன்னும் சிறப்பாக தொடரும் என பதிவிட்டுள்ளார்.

இவரை தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுசெயலாளர் சந்தோஷ் பாபு அவர்களும் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து சந்தோஷ் பாபு தனது ட்விட்டரில், எனது பதவியையும், உறுப்பினராகவும் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து ராஜினாமா செய்கிறேன் என்பதை நான் உங்களுக்கு தெரிவிக்கிறேன். எனது முடிவு தனிப்பட்ட காரணங்களால் எடுக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

நேர்மையான ஊழலற்ற நிர்வாகத்தை தரும் அருகதை கமலஹாசனுக்கு மட்டுமே இருக்கிறது என சில நாட்களுக்கு முன்பு கூறிய சந்தோஷ் பாபு அக்கட்சியில் இருந்து தற்போது விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்