சங்கர நேத்ராலயா நிறுவனர் பத்ரிநாத் காலமானார்..!
சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத் இன்று காலை அவரது இல்லத்தில் காலமானார். இவருக்கு வயது (83). கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பத்ரிநாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமானார்.
கடந்த 1940 பிப்ரவரி 24ஆம் தேதி சென்னையில் பிறந்த செங்கமேடு சீனிவாச பத்ரிநாத் இளம் வயதிலேயே பெற்றோர் இருவரையும் இழந்தார். பெற்றோர்கள் இறந்த பிறகு தனக்கு கிடைத்து காப்பீடு தொகையில் மருத்துவ படிப்பை முடித்தார். அதன் பிறகு நியூயார்க்கில் மருத்துவ பணியை தொடங்கினார். பல கண் மருத்துவ மையங்களில் பயிற்சி பெற்றார். பிறகு 1978 ஆம் ஆண்டு இந்தியாவின் மீண்டும் டாக்டர் பத்ரிநாத் மருத்துவர்கள் குழுவின் உதவிகளுடன் சென்னையில் ‘சங்கர நேத்ராலயா’ என்ற தொண்டு நிறுவனத்தை நிறுவினார்.
சமூகத்தில் பொருளாதாரத்தின் நலிவடைந்த பிரிவினருக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவரால் நிறுவப்பட்ட ‘சங்கர நேத்ராலயா’ கண் மருத்துவமனை மூலம் தினமும் நூற்றுக்கணக்கான ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை மையமாக திகழ்கிறது. டாக்டர் பத்ரிநாத் தொண்டுக்காக ‘பத்மஸ்ரீ’, ‘பத்மபூஷன்’ , மற்றும் ‘பத்ம விபூஷன்’ விருதுகளையும் பெற்றுள்ளார். இது தவிர அண்ணாமலை மற்றும் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகமும் இவருக்கு கௌரவ பட்டம் வழங்கியது.