sanathanam: எனக்கே 10 கோடி என்றால் செல்லூர் ராஜூ தலைக்கு எத்தனை கோடி.. அமைச்சர் உதயநிதி பேச்சு!

udhaystalin

சனாதனம் குறித்த பேச்சு இன்னு ஓய்ந்தபாடு இல்லை. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற சனாதனம் ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தமிழக மட்டுமல்லாமல் தேசிய அளவில் பேசப்பட்டது. சனாதனத்தை டெங்கு, மலேரியா, கொரோனா போன்று ஒழிக்க வேண்டும் என்ற அவரது பேச்சி சர்ச்சையானதை அடுத்து, பாஜகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல், அமைச்சர் உதயநிதி தலைக்கு உத்தரபிரதேச சாமியார் ஒருவர் விலை வைத்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சமயத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தற்போது கலந்துகொள்ளும் நிகழ்வுகளில், சனாதனம் குறித்து எதாவது கூறி அதிமுக, பாஜகவை விமர்சித்து வருகிறார். அந்தவகையில், மதுரையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என கூறிய எனக்கே ரூ.10 கோடி என்றால் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைக்கு எத்தனை கோடி என தெரியவில்லை என விமர்சித்துள்ளார்.

சனாதனம் குறித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் பேச்சை மேற்கொள் காட்டி பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செப்.2ம் தேதி சென்னையில் ஒரு மாநாடு நடந்தது. அந்த மாநாட்டின் பெயரே சனாதனம் ஒழிப்பு மாநாடு. அந்த மாநாட்டில் நான் பேசியது வெறும் 5 நிமிடம் தான். ஆனால், நான் பேசாததை பேசுனதாக சொல்லி, பொய் பரப்பி, அதை பூதாகரமாக்கி தமிழ்நாடு, இந்தியா மட்டுமல்ல உலகம் முழுக்க அதை பற்றி பேச வைத்தார்கள்.

என் மீது பலவேறு இடங்களில் பொய் வழக்குகள் போடப்பட்டது. என்னுடைய தலைக்கு விலை பேசப்பட்டது. உதயநிதியின் தலையை சீவினால் 10 லட்சத்தில் ஆரம்பித்து 10 கோடி வரை வழங்கப்படும் என உத்தரபிரதேச சாமியார் சொல்லிக்கிட்டு இருந்தார். நான் அப்போது தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் கேட்டுக்கொண்டது, என்னை விட்டுவிடுங்கள் என்னை வைத்து பெரிய செய்தியாக உருவாக்கிவிட்டீர்கள். சனாதனம் குறித்து அதிமுக தலைவர்களிடம் கேளுங்க, அவர்கள் கொள்கை என்ன, விருப்பம் என்ன என்று கேளுங்கள் என கூறியதாக கூறினார்.

இதையடுத்து, நான் கேட்டது தொடர்பாக பேசிய மதுரை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள், அந்த சாமியாருக்கு கோவம் வரும் அளவுக்கு அமைச்சர் உதயநிதி ரொம்ப கோவமாக பேசிவிட்டார் என அவருக்கு ஆதரவாக பேசினார். நான் மீண்டும் கேள்வி எழுப்பினேன், சனாதனத்தை பற்றி என்ன சொல்ல போறிங்கனு, அண்ணா பெயரை கட்சியில் வைத்துள்ளீர்கள், அண்ணா உருவத்தை கொடியில் வைத்துள்ளீர்கள், எனவே, சனாதனம் தொடர்பாக என்ன பதில் சொல்லுங்க என்று கேள்வி எழுப்பினேன் என்றார்.

அதற்கு அவரது பதிலில், சனாதனத்தை ஒழித்து பல வருடங்கள் ஆகிவிட்டது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியிருக்கிறார். நானாவது சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என சொன்னேன். ஆனால், சனாதனத்தை ஏற்கனவே ஒழித்து பல வருடங்கள் ஆகிவிட்டது என கூறியுள்ளார்.

இதனால், நான் ஒரு சவால் விடுகிறேன், செல்லூர் ராஜு அவர்களே  உங்களது ஓனர்ஸ் அமித்ஷா, மோடி உள்ளிட்டோரிடம் சனாதனத்தை ஏற்கனவே ஒழித்துவிட்டோம் என உங்களால் தைரியமாக சொல்ல முடியுமா என உதயநிதி ஸ்டாலின் சவால் விடுப்பதாக கூறினார்.சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என அழைப்பு விடுத்த என்னுடைய தலைக்கே 10 கோடி என்றால், சனாதனத்தை ஏற்கனவே ஒழித்துவிட்டோம் என கூறிய அண்ணன் செல்லூர் ராஜூ தலைக்கு எத்தனை கோடி இருக்கும் என விமர்சித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்