Sanathanam: குடியரசுத் தலைவரை கூப்பிடாம, நடிகையை கூப்பிட்டதுதான் சனாதனம் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
கடந்த 15ம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அப்போது, 13 பேருக்கு இத்திட்டத்திற்கான பிரத்யேக டெபிட் கார்டு வழங்கப்பட்டது. இந்த நிலையில், மதுரை பாண்டி கோவில் அருகே தமிழக அரசின் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயனாளிகள் 500க்கும் மேற்பட்டோருக்கு அதற்கான வங்கி பரிவர்த்தனை அட்டை வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடந்தது.
இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வங்கி அட்டையை வழங்கினார். இதன்பின் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் உரிமைத் திட்ட பயனாளிகள் 500-க்கும் மேற்பட்ட மகளிருக்கு உரிமை தொகை பெறுவதற்கான டெபிட் கார்டுகளை வழங்கி உள்ளேன். இது வெறும் டெபிட் கார்டு அல்ல பெண்களின் வாழ்க்கையை மாற்றும் துருப்புச் சீட்டு ஆகும்.
இன்று இந்தியா முழுவதும் இந்த திட்டத்தை பின்பற்றி வருகிறார்கள். பெண்கள் முன்னேற்றத்தில் பெரியார் கண்ட கனவுகளுக்கு நம்முடைய திமுக திமுக தான் செயல் வடிவம் கொடுத்து வருகிறது என தமிழக அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். இதன்பின் பேசிய அவர், செப்.2ம் தேதி சென்னையில் ஒரு மாநாடு நடந்தது. அதுதான் சனாதனம் ஒழிப்பு மாநாடு. அதில் கலந்துகொண்டு ஒரு 10 நிமிடம் தான் பேசியுள்ளேன்.
ஆனால், அதனை பொய்யாக திரித்து, பொய் செய்தியாக பரப்பி தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் அமித்ஷா, மோடி வரைக்கும் இந்த பொய் செய்தியை குறித்து பேசுகிறார்கள். திராவிட இயக்கம் தொடங்கப்பட்டதே சனாதனத்தை ஒழிக்கத்தான். சனாதனத்தை ஒழிக்கும் வரை போராடி தான் ஆகவேண்டும். அண்ணா பேசிய அனைத்து கருத்துக்களையும் திமுக பேசி வருகிறது. சனாதனம் குறித்து இப்போது நிறைய பேர் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு கூறுகிறேன் என்றார்.
அவர் கூறுகையில், டெல்லியில் கிட்டத்தட்ட 800 கோடி ரூபாய் செலவில் புதிய நாடாளுமன்றம் சமீபத்தில் திறக்கப்பட்டது. இந்தியாவின் முதல் பிரதிநிதி தான் நம்முடைய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு. கடந்த மாதம் புதிய நாடாளுமன்றத்தை திறந்தார்கள், இங்கிருந்து தனி விமானம் மூலம் சாமியார்களை அழைத்து சென்றார்கள். செங்கோல் எல்லாம் எடுத்து சென்றார்கள், அவர்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் என்ன சம்பந்தம் என கேள்வி எழுப்பியுள்ளார்.
பாராளுமன்றம் என்பது மக்கள் பிரதிநிதிகள் சென்று மக்கள் பிரச்சனை குறித்து பேசும் இடம் தான் பாராளுமன்றம். அப்படி இருக்கும் பட்சத்தில் நாட்டின் முதல் பிரதிநிதி ஜனாதிபதியை புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு அழைக்கவில்லை. ஏன் அழைக்கவில்லை, அவர்கள் மலைவாழ் மக்கள், அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள். அதுமட்டுமல்ல கணவரை இழந்தவர் என்பதால் அழைக்கவில்லை என கூறினார்.
ஆனால், நேற்று புதிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்பட்டது. அதற்கு இந்தி நடிகைகளை அழைத்து சென்றுள்ளனர் என விமர்சித்தார். ஆனா, நாட்டின் முதல் பிரதிநிதியான ஜனாதிபதியை கூப்பிடவில்லை. ஏனென்றால் அவர் கணவரை இழந்தவர், இதுதான் சனாதனம். இந்த சனாதனத்தை தான் ஒழிக்க வேண்டும். பிறப்பால் அனைவரும் சமம் என்பதற்காக தான், இந்த சனாதனத்தை ஒழிக்க குரல் கொடுத்து வருகிறோம். இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.