Sanatanam: உதயநிதி புதிதாக சொல்லவில்லை..75 ஆண்டுகளாக பேசியதைத்தான் பேசியுள்ளார் – கே.எஸ்.அழகிரி
சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசிய கருத்துக்கு ஆதரவுகள் ஒருபக்கம் பெருகி வந்தாலும், அதே சமயத்தில் எதிர்ப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற சனாதனம் ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெங்கு, மலேரியா, கொரோனாவை போன்று சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என பேசியது சர்ச்சையை உள்ளாகி பேசும்பொருளாக மாறியது.
இந்து மதத்தை புண்படுத்தியதாக பாஜகவினர் மற்றும் சில அமைப்புகள் எதிர்ப்பு வருகின்றனர். ஆனால், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி கூறியது சரியானது என மறுபக்கம் ஆதரவும் பெருகி வருகிறது. சனாதனம் குறித்து உதயநிதி பேசியதை திரித்து பாஜகவினர் பொய் பரப்புவதாகவும் திமுகவினர் குற்றசாட்டை முன்வைக்கின்றனர். அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
அதுமட்டிமில்லாமல், அமைச்சர் உதயநிதி பேச்சுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என பிரதமர் மோடி பாஜகவினருக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறப்பட்டது. உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சுமார் 200க்கும் மேற்பட்டோர் கடிதம் எழுதியிருக்கும் நிலையில், அவர் மீது பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், சனாதனம் ஒழியும் வரையில் எனது குரல் ஒலித்து கொண்டே இருக்கும் என உதயநிதி தனது கருத்தில் உறுதியாக உள்ளார். முகாமைச்சர் ஸ்டாலினும், உதயநிதி பேசியது சனாதனத்தை பற்றி தான், எந்த மதத்தின் மீதும் வெறுப்புணர்வை வெளிப்படுத்தவில்லை எனவும் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதுபோன்று உதயநிதி கருத்துக்கு ஆதரவு குரல் அதிகரித்து வரும் நிலையில், 75 ஆண்டுகளாக பேசியதைத்தான் உதயநிதி பேசியுள்ளார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் ஓராண்டு நிறைவடைவதை நினைவு கூறும் வகையில் சென்னை பெரம்பூர், மாதவரம் நெடுஞ்சாச்சாலையில் காங்கிரஸ் சார்பாக நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. இதில் கலந்துகொண்டு நடைப்பயணத்தை தொடங்கி வைத்த பின் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி, 75 ஆண்டு காலமாக பேசியதை தற்போது உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
சனாதனம் குறித்து உதயநிதி ஒன்றும் புதிததாக சொல்லவில்லை, தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் சொன்னதை தற்போது அவர் சொல்லியுள்ளார். அவ்வளவு நாள் வாயை மூடிக்கொண்டு இப்போது குத்துகிறார்கள் என்றால் என்ன காரணம் என தெரியவில்லை. இதனால் அது ஏற்புடையதல்ல என தெரிவித்தார்.