சாம்சங் நிறுவனத்திற்கும் ஊழியர்களுக்கும் என்ன பிரச்சனை.? விரிவாக விளக்கிய தங்கம் தென்னரசு.!
சாம்சங் நிறுவனத்தில் சிஐடியு தொழிற்சங்கம் அமைக்கும் கோரிக்கை தற்போது நீதிமன்றத்தில் வழக்காக நிலுவையில் உள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் கூறினார்.
சென்னை : ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் ஊழியர்கள் போராட்டம் தான் தற்போது மாநிலம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. போராட்டம் நடத்தும் சிஐடியு தொழிற்சங்கத்தினர் , சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று சாம்சங் ஊழியர்களை ஏற்றிச்சென்ற சரக்கு வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானது. அப்போது அங்கிருந்த காவல்துறையினருடன் ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இந்த பிரச்னையை அடுத்து நேற்று நள்ளிரவில் தொழிற்சங்கத்தை சேர்ந்த சில ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
Read more – போராட்ட களத்தில் சாம்சங் ஊழியர்கள்., தற்போதைய நிலவரம் என்ன.?
இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து இன்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஊழியர்களையும் காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதனை அடுத்து சாம்சங் தொழிலாளர்கள் விவகாரம் குறித்து விரிவான விளக்கத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அரசின் நோக்கம் :
அவர் கூறுகையில், ” சாம்சங் தொழிலாளர்கள் விவகாரம் குறித்து முதலமைச்சர் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி, அதற்கென அமைச்சர் குழு அமைக்கப்பட்டது. அவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையே தொழிலாளர்களின் நலனை நாம் முழுமையாக காக்க வேண்டும் என்பது தான். அதேநேரத்தில் நமது மாநிலத்தில் உள்ள படித்த இளைஞர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்புகளை பெற வேண்டும் என்ற அக்கறையோடு அரசு ஆரம்பத்தில் இருந்தே இந்த பிரச்சனையை அணுகி வருகிறது.
சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு , தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை சார்பாக எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள், பேச்சுவார்த்தையின் பலனாக தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை சாம்சங் நிறுவனம் ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளது.
ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகள் :
குறிப்பாக, இந்த பேச்சுவார்த்தையின் போது எடுக்கப்பட்ட முடிவுகள் அடிப்படையில் மிக முக்கியமான சில கோரிக்கைகளை சாம்சங் நிறுவனம் ஒத்துக்கொண்டு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளார்கள். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், தற்போது வழங்கப்பட்டு வரும் மாத ஊதியத்தோடு சேர்த்து ஒவ்வொரு ஊழியருக்கும் சிறப்பு ஊக்கத்தொகையாக மாதந்தோறும் ரூபாய் ரூ.5 ஆயிரம் அக்டோபர் முதல் தேதியில் இருந்து கூடுதலாக வழங்கப்படும். அதேபோல பணிக்காலத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்திற்கு உடனடி நிவாரணமாக ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும்.
அனைத்து தொழிலாளர்களுக்கும் குளிரூட்டப்பட்ட பேருந்து வசதி உருவாக்கி தரப்படும். தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதி உணவு வசதி உள்ளிட்டவை மேம்படுத்தி செய்த தரப்படும். தற்போது வழங்கப்பட்டு வரும் விடுப்புடன் குடும்ப நிகழ்வு விடுமுறை வழங்கப்படுவது போன்ற கோரிக்கைகளை சாம்சங் நிறுவனம் நிறைவேற்ற ஒப்பந்தம் அளித்துள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கு :
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருக்கக்கூடிய சிஐடியு அமைப்பு அந்த அமைப்பின் பதிவு குறித்து தங்கள் கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் நீதிமன்றத்தின் தீர்ப்பு அடிப்படையில் நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
சிஐடியு அமைப்பு பதிவது தொடர்பாக வழக்கின் அடிப்படையில் நீதிமன்றத்தின் தீர்ப்பை தொழிலாளர் நலத்துறை நிச்சயம் நிறைவேற்றும். இது சிஐடியு அமைப்பிற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே படித்து வேலைவாய்ப்பை எதிர்நோக்கி இருக்கக்கூடிய ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு சிஐடியு அமைப்பு இந்த போராட்டத்தை கைவிட வேண்டும் என அரசின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
வீடு புகுந்து கைது செய்யப்படவில்லை :
வீடு புகுந்து எந்த ஊழியரையும் காவல்துறையினர் கைது செய்யவில்லை. நேற்று ஒரு விபத்து நடந்துள்ளது. அந்த விபத்தில் சிலரை காப்பாற்ற காவல்துறையினர் சென்றுள்ளனர். அப்போது காவல்துறையுடன் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. அதில் ஈடுபட்டவர்களை மட்டும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் பிணையில் வந்து விட்டனர். அரசாங்கம் அவர்களை ரிமாண்ட் செய்யவில்லை. இது தொழிலாளர்களின் உணர்வுகளை மதிக்க கூடிய அரசாங்கம். வீடு புகுந்து கைது செய்தனர் என்ற கூற்று சரியானதல்ல.
சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் :
சிஐடியு தொழிற்சங்கத்தினர் பதிவு செய்வதில் எந்தவித குழப்பமும் இல்லை. ஆனால், அவர்கள் பதிவு செய்வதற்கு சாம்சங் நிறுவனம் தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சாம்சங் இந்தியா நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைக்க அங்கீகாரம் தர வேண்டும் என ஒரு அப்ளிகேஷனை கொடுத்துள்ளார்கள். இந்த விண்ணப்பம் கடந்த 2.7.2024 அன்று கொடுக்கப்படுகிறது. இது தொழிலாளர் நலத்துறைக்கு அனுப்பப்படுகிறது. அங்கு 8.7.2024க்கு விண்ணப்பம் வருகிறது. அதில் சில குறைபாடு இருப்பது அறியப்படுகிறது. அதேசமயம் 20.8.2024 அன்று சாம்சங் நிறுவனம் தொழிற்சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. பின்னர் 3.9.2024 அன்று சிஐடியு அதற்கு பதில் மனுவை கொடுத்துள்ளது.
அடக்குமுறை இல்லை :
தமிழ்நாட்டை விட்டு வேறு எங்கும் சாம்சங் நிறுவனம் செல்லவில்லை. தமிழ்நாட்டில் தொழில் செய்ய ஏற்ற சூழல் அவர்களுக்கு இருக்கிறது. 38.000 கோடிக்கு முதலீடு வருகிறது. இதனை நாங்கள் அரசியலாக பார்க்கவில்லை. சிஐடியுவுக்கும் அரசுக்கும் எந்தவித வெறுப்புகளும் இல்லை. அவர்கள் அவர்களின் கோரிக்கையை கூறுகிறார்கள். எந்த அடக்கு முறையையும் நாங்கள் மேற்கொள்ளவில்லை. செய்யவும் மாட்டோம். தொழிலாளர் நலத்துறை சார்பில் பல்வேறு தொழிற்சாலையில் தொழிற்சங்கங்களை பதிவு செய்துள்ளோம்.
பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனையை தீர்க்க நினைக்கிறோம். ஆனால், அவர்கள் வைக்கும் கோரிக்கைகள் தற்போது நீதிமன்றம் வரை சென்று விட்டது. அதனால் இனி முடிவு என்பது நீதிமன்றம் கையில் தான் இருக்கிறது.” என சாம்சங் ஊழியர்கள் போராட்டம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.