சேலம், திருச்சி, நெல்லையில் மெட்ரோ ரயில் திட்டம்! தமிழ்நாடு அரசிடம் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு!
தமிழ்நாட்டில் சேலம், திருச்சி, நெல்லையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்தது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம். முதற்கட்ட பணிகளான 3 மாவட்டங்களுக்கான விரிவான சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை அரசிடம் அளிக்கப்பட்டது.
சென்னை, கோவை, மதுரைக்கு அடுத்தபடியாக சேலம், திருச்சியில் திட்டத்தை செயல்படுத்த மெட்ரோ ரயில் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, திருச்சியில் 26 கி.மீக்கு ஒரு கட்டமாகவும், 19 கி.மீக்கு ஒரு கட்டமாகவும் என இரண்டு கட்டங்களாக மொத்தம் 45 கி.மீ தூரத்திற்கு வழித்தடம் அமைக்க சாத்தியக்கூறு இருப்பதாக ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லையை பொறுத்தவரை மெட்ரோ ரயில் வழித்தடத்திற்கான வாய்ப்பு இல்லை என்றும் லைட் மெட்ரோ மட்டுமே அமைக்க முடியும் எனவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சேலம், திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கையை அரசின் பரிசீலனைக்கு பிறகு திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.