கேரளா ஏ.டி.எம் கொள்ளையர்கள் தமிழ்நாட்டில் சிக்கியது எப்படி..? காவல்துறை விளக்கம்.!
திருச்சூரில் ஏ.டி.எம் கொள்ளையில் ஈடுப்பட்ட கொள்ளையர்கள் தமிழக காவல்துறையினரிடம் சிக்கியது எப்படி என்று சேலம் சரக டிஐஜி உமா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நாமக்கல் : இன்று அதிகாலை கேரளா மாநிலம் திருச்சூரில் தொடர் ஏ.டி.எம் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள், அங்கிருந்து கண்டெய்னர் லாரி மூலமாக தமிழக எல்லைக்குள் நுழைந்தனர். அவர்களை நாமக்கல், குமாரபாளையம் அருகே தமிழக காவல்துறையினர் விரட்டி பிடித்தனர். அப்போது கொள்ளையர்களை பிடிக்க முற்பட்டபோது நேர்ந்த என்கவுண்டர் சம்பவத்தில் ஒரு கொள்ளையன் உயிரிழந்தான்.
தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை சம்பவம் குறித்து சேலம் சரக டிஐஜி உமா மற்றும் நாமக்கல் எஸ்பி ராஜேஷ் கண்ணா ஆகியோர் செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை குறிப்பிட்டனர். அதில், ” காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ராஜஸ்தான் பதிவெண் கொண்ட வாகனம் ஒன்று நிற்காமல் சென்றது. பின்னர் அதனை பின்தொடர்ந்து காவல்துறையினர் சென்றனர். சங்ககிரி நோக்கி சென்று கொண்டிருக்கையில் அங்கு டோல்கேட் இருந்ததால் மீண்டும் போன வழியில் கண்டெய்னர் திரும்பி வந்தது. இரண்டு முறை சங்ககிரி சுற்றி அந்த கண்டெய்னடர் லாரி சென்றது. அதன்பிறகு வெப்படை சாலை திரும்புகையில் கண்டெய்னரை வேகமாக இயக்கியுள்ளனர். இதனால் நாங்கள் மாவட்டம் முழுவதும் காவல்துறையினரை தீவிரபடுத்தினோம்.
வேகமாக கண்டெய்னர் லாரியை ஓட்டி இரண்டு பைக், ஒரு காரை மோதி வந்து கொண்டிருக்கிறது. நமது போலீசார் சென்று வண்டியை நிறுத்தி உள்ளனர். டிரைவரை இறக்கி கைது பண்ணி விட்டோம். டிரைவர் உடன் இருந்த நான்கு பேரையும் கைது செய்து அதே டிரைவர் கொண்டு கண்டெயினரை இயக்கி வெப்படை வந்து கொண்டிருந்தோம். அந்த கண்டெய்னர் லாரி திருச்சூரில் இருந்து வந்தது என்பது விசாரணையில் தெரியவந்தது.
வெப்படை காவல் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தோம். அப்போது கண்டெய்னடரில் சத்தம் கேட்கவே, உள்ளே திறந்து பார்வையிட்டோம். அப்போது இரண்டு பேர் உள்ளே இருந்தனர்.அதில் ஒருவன் ப்ளூ கலர் பேக் உடன் கன்டெய்னரிலிருந்து குதித்து ஓடினான். பின் டிரைவர் அவரைப் பார்த்து ஓடு என சைகை செய்தான்.
அப்போது அந்த ஒரு நபர் இன்ஸ்பெக்டரை தாக்கிவிட்டு தப்ப முயன்றான். அதனால் தற்காப்புக்காக சுட்டுப்பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்துவிட்டார். இன்னொருவரையும் பிடிக்க காலில் சுட்டுள்ளனர். மற்ற மாநில காவல்துறையினருக்கு தகவல் எல்லாம் கொடுத்து விட்டோம். ஏடிஎம்-ஐ கொள்ளையடிப்பது தான் இவர்களது நோக்கம். காலில் சுடப்பட்டவரை கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை சேர்த்து சிகிச்சை அளித்து வருகிறோம். மற்றவர்களிடம் விசாரணை செய்து வருகிறோம்.
இன்னும் பணத்தை எண்ணவில்லை. திருச்சூரில் ஏடிஎம்-ஐ கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்டது கார் தான். அதன் மூலம் மூன்று ஏடிஎம்களிலும் அவர்கள் கொள்ளையடித்துள்ளனர். திருச்சூர் போலீசார் கொடுத்த தகவல் அடிப்படையில் தான் நாங்கள் அந்த வெள்ளை காரை வைத்து கொள்ளையர்களை அடையாளம் கண்டு கொண்டோம்.
மொத்தம் ஏழு பேர் அதில் ஒருவர் என்கவுண்டரில் இறந்துவிட்டார். இன்னொருவர் காலில் சுடப்பட்டுள்ளார். மீதம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மேல் தமிழகத்தில் வழக்குகள் இதுவரை விசாரித்ததில் இல்லை. தற்போது நாங்கள் மட்டுமே விசாரணை செய்து வருகிறோம். கேரளா போலீசார் இனி தான் வருவார்கள். அவர்கள் வந்தால் வழக்கு பற்றிய முழு விவரம் தெரியவரும். இவர்கள் குறிக்கோள் பணம் மட்டுமே. அதுவும் ஸ்டேட் பேங்க் ஏடிஎம்-ஐ தான் இவர்கள் பின்தொடர்கிறார்கள். ஏனென்றால் அதில்தான் அதிக பணம் நிரப்புகிறார்கள.
டெல்லியில் இருந்து இவர்கள் கன்டெய்னரில் லோடு ஏற்றிக்கொண்டு இங்கு வருகிறார்கள். இன்னொரு குரூப் காரில் வருகிறது. பின்னர் இங்கு வந்து இரண்டு பேரும் சேர்ந்து கொள்கிறார்கள். இவர்கள் எல்லோருமே கூகுள் மேப் உதவியுடன் எங்கெல்லாம் ஏடிஎம் இருக்கிறது என்பதை பார்க்கிறார்கள். அந்த ஏடிஎம்-ஐ டார்கெட் செய்கிறார்கள். கன்டெய்னர் ஏடிஎம் திருட்டு நடக்கும் இடத்திற்கு போவதில்லை. காரில் தான் இவர்கள் செல்கிறார்கள். கொள்ளையடித்துவிட்டு பின்னர் காருடன் பணத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிடுகிறார்கள். இவர்கள் ஏடிஎம் உடைப்பதற்கு கேஸ் வெல்டிங் மூலமாகத்தான் செய்கிறார்கள். இதுதான் இவர்களது நோக்கம். ” என்று கொள்ளையர்கள் பற்றியும், அவர்களை பிடிக்கும் போது நேர்ந்த என்கவுண்டர் சம்பவம் பற்றியும் செய்தியாளர்களிடம் சேலம் டிஐஜி உமா தெரிவித்தார்.