சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்ட வழக்குகள் ஆகஸ்ட் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.!
பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.10,000 கோடி செலவில் 277 கி.மீ தொலைவிற்கு சேலம் – சென்னை இடையே 8 வழி சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. பின்னர்,இந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டது.
இதனால், விவசாய நிலம், காடுகள், நீர் நிலைகள் பாதிக்கும் என கூறி இந்த திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனையடுத்து, மற்றும் நில உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிலம் கையகப்படுத்த தடை விதித்தது.
நிலம் கையகப்படுத்துவதற்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எட்டு வழி சாலை திட்ட செயல் இயக்குனர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் சுற்றுச்சூழல் அமைச்சகம், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை ஜூலை முதல் வாரத்துக்கு ஒத்தி வைத்தது.
கடந்த வாரம் இந்த வழக்கு காணொளி மூலம் விசாரணை நடைபெற்றது. அப்போது வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்நிலையில், இன்று மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, சேலம்-சென்னை 8 வழிச்சாலை குறித்த வழக்குகளை ஆகஸ்ட் 6 -ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.