நாளை முதல் 500 நியாயவிலை கடைகளில் தக்காளி விற்பனை..! அமைச்சர் பெரிய கருப்பன் பேட்டி..!

MinisterPeriyakaruppan

தமிழகத்தில் தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தக்காளி விளைச்சல் குறைவாக இருப்பதாலும், அதன் வரத்து குறைந்திருப்பதாலும் விலை அதிகமாக உள்ளது. இந்த விலை உயர்வானது குடும்பத்தலைவிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், ரூ.60 ஆக இருந்த  தக்காளி விலை, தற்போது கிலோ ரூ.200 வரை விற்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் தக்காளி விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழக அரசு நியாயவிலை கடைகளின் மூலம் தக்காளி  விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், இன்று தக்காளி விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமைச்சர் பெரியகருப்பன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது, தமிழகத்தில் தக்காளி விலை அதிகமாகி உள்ள நிலையில் கூடுதலான விலைக்கு தக்காளியை வாங்கி அதை கூட்டுறவு சங்கங்களின் மூலமாக நியாய விலை கடைகள் மூலமாக நாம் விநியோகம் செய்திருக்கிறோம்.

நமது முதலமைச்சர் அதை இன்னும் விரிவுபடுத்த வேண்டும் என்று எங்களுக்கு உத்தரவிட்டார்கள். அதன் அடிப்படையில் மூன்றாம் கட்டமாக 300 கடைகளுக்கு நியாய விலை கடைகளுக்கு விற்பதற்கு விரிவாக்கம் செய்தோம். தொடர்ந்து பல மாநிலங்களில் இதே பிரச்சனை இருக்கிறது

ஆகவே, இந்த 300 கடைகளின் எண்ணிக்கையை இன்னும் பரவலாக கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று சொல்லி முதலமைச்சர் அனுமதியோடு நாளை முதல் தமிழகத்தில் குறைந்தது 500 நியாய விலைக் கடைகளில் தக்காளியை விற்பனை செய்வதற்காக விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

தக்காளி உற்பத்தி என்பது இன்னும் விளைச்சல் இருக்கக்கூடிய பகுதிகளில் போதுமானதாக வரவில்லை என்பது தான் நாட்டின் பல மாநிலங்களில் இருந்து செய்திகள் நமக்கு உணர்த்துகிறது. ஏற்கனவே ஓரிரு வாரங்களில் இது சரியாகிவிடும் என்று நாம் எதிர்பார்த்தோம்.

ஆனால் ஒரு மாதங்களை கடந்து இருக்கின்ற இந்த நிலையிலும் இன்னும் உற்பத்தி அதிகரிக்கவில்லை என்பது நமக்கு கவலை அளிக்கிறது. ஆனாலும் கூட எந்த அரசும் எந்த முதலமைச்சரும் எடுத்திராத நடவடிக்கைகளை, மக்களின் மீது இந்த சுமை சென்று விடக்கூடாது என்பதற்காக நம்முடைய முதலமைச்சர் நேரடியாக அதைப்போல எங்களை வைத்தும் பல நடவடிக்கைகள் எடுத்திருக்கிறார்கள் என்பதை நம் நாட்டு மக்கள் நன்கு உணர்ந்து இருக்கிறார்கள்.

முதலமைச்சருடைய இந்த நடவடிக்கைகளை நாங்களும் பொதுமக்களை சந்திக்கின்ற நேரத்தில் வெகுவாக பாராட்டுகிறார்கள். அவர்களுடைய கோரிக்கைகளும் இதுதான். இன்னும் கூடுதலான பல கடைகளில் கிடைப்பதற்கு நீங்கள் வழிவகை செய்தால் பயனுள்ளதாக இருக்கும் என கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

அதை முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, நாளை முதல் 500 கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும். அனைத்து மாவட்டங்களிலும் சராசரியாக 10 கடைகளிலும், சில மாவட்டங்களில் 15 கடைகளிலும் பரப்பளப்புக்கு ஏற்றவாறு விற்பனை செய்ய முடிவு எடுத்துள்ளோம்

இந்த விலையேற்றம் என்பது வியாபாரிகளால் ஏற்றப்படுகின்ற விலையென்றால் ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் கெடு சொல்லலாம். ஆனால், கடுமையான மழையின் காரணமாக விளைச்சல் ஏற்படுவதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது. விளைச்சல் குறைவின் காரணமாகத்தான் இந்த விலை ஏற்றம்.

இதனால் தக்காளிகளின் வரத்து குறைவாக உள்ளது. உற்பத்தி குறைவானதாலும், வெளி மாநிலத்திலிருந்து வரக்கூடிய தக்காளிகளின் அளவு குறைவானதாலும் தான் இந்த மாற்றம் ஏற்படுகிது. இது இயற்கையான விலையேற்றமே தவிர செயற்கையான வெளியேற்றம் இல்லை என்பதை கூறிக் கொள்கிறேன்

வணிகர்கள் ஒரு அளவிற்கு ஒத்துழைப்பு தருகிறார்கள் இதனால் தான் இந்த நிலைமை தற்பொழுது கட்டுக்குள் இருக்கிறது. மேலும் நம்மிடம் நடமாடும் கடைகள் மட்டும் இல்லாமல் நிலையான கடைகளில் ஏராளமாக உள்ளன. ஆனால் எல்லா இடங்களிலும் விற்பதற்கு தேவையான தக்காளிகள் நமக்கு கிடைக்கவில்லை.

அறிவிப்புகள் நடைமுறைக்கு வர வேண்டும். அறிவிப்புகள் வெறும் அறிவிப்புகளாக இருந்துவிடக் கூடாது என்பதில் முதலமைச்சர் கவனமாக இருக்கிறார். முதலமைச்சர், மூன்று துறையின் உடைய அமைச்சர்கள் மற்றும் அலுவலர்களை அழைத்து ஆலோசனை நடத்தி 300 கடைகள் என்று உயர்த்தினார்கள்.

காமதேனு மற்றும் உணவு துறையின் மூலமாக இயங்குகின்ற கடைகளிலும் சூப்பர் மார்க்கெட் களிலும் தக்காளி விற்பனைகளை செய்து வந்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது. இது விலையேற்றத்திற்கு அடிப்படை என்னவென்றால் தற்பொழுது விளைச்சல் குறைவாக இருக்கிறது இதனால் தக்காளிகளின் வரத்தும் குறைவாக இருக்கிறது.

எனவே, எவ்வளவு நஷ்டம் இருந்தாலும் அதை வாங்கி குறைந்த விலைக்கு கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் எங்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார். ஆனால் கிடைக்கக்கூடிய தக்காளி வரத்து குறைவாக இருக்கின்ற காரணத்தால் தான், இந்த நிலையே தவிர, 35 ஆயிரம் கடைகளில் விற்கலாம் என்று விரும்பினாலும் கூட அதற்கான பொருள் கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது.

மேலும் நாள் ஒன்றிற்கு நியாய விலை கடைகளில் சராசரியாக 500 கிலோ என்று அளவிலே விற்பனை செய்யப்படுகிறது. அதைப்போல, பண்ணை பசுமை கடைகள் மூலமாக அம்மா உணவகம் போன்ற மற்ற மொத்தமாக வாங்கக்கூடிய இடங்களிலும் விற்பனை நடந்து வருகிறது. சராசரியாக விட நான்கு மடங்கு வரை இப்பொழுது கூட்டுறவுத் துறையின் சார்பில் விற்கப்படுகிறது.

தொடர்ந்து, வேளாண் துறையோடு நம்முடைய கூட்டுறவுத்துறை, உணவு வழங்கல் துறை கலந்து பேசியிருக்கிறோம். உயர்மட்ட அளவில் இதை செய்யும் பொழுது அடுத்த ஆண்டு இது போன்ற பருவங்களில் உற்பத்தி குறைகின்ற நேரங்களில், நாம் அந்த உற்பத்தியை பெருக்குவதற்கான முயற்சிகள் ஈடுபட வேண்டும். இப்பொழுது இதை நாம் கடந்து விட வேண்டும். எதிர்காலத்தில் அதற்கு தேவையான திட்டங்கள் இப்போது தயாராகிக் கொண்டிருக்கின்றன என்று அமைச்சர் பெரிய கருப்பன் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்