மகா விஷ்ணுவுக்கு மீண்டும் நீதிமன்ற காவல்.! சைதை நீதிமன்றம் உத்தரவு.!
சர்ச்சை பேச்சால் கைதாகியிருந்த மகா விஷ்ணுவை வரும் செப்டம்பர் 20ஆம் தேதி வரையில் நீதிமன்றக் காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை : அசோக் நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த தன்னம்பிக்கை நிகழ்ச்சியில், பேச்சாளர் மகா விஷ்ணு ஆன்மீகம், முன்ஜென்மம் பற்றிய சர்ச்சை கருத்துக்களையும், மாற்றுத்திறனாளிகள் குறித்து கடுமையான கருத்துக்களையும் பேசியிருந்தார். இதனை எதிர்த்து கேள்வி எழுப்பிய மாற்றுத்திறனாளி ஆசிரியரையும் மகா விஷ்ணு விமர்சனம் செய்திருந்தார்.
மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த மாகா விஷ்ணு பேச்சு குறித்து அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். பள்ளிக்கல்வித்துறை சார்பில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த பள்ளி தலைமை ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பினர் மகா விஷ்ணு மீது புகார் அளித்தனர். இப்புகாரின் பெயரில் ஆஸ்திரேலியாவில் இருந்த மகா விஷ்ணுவை கடந்த 7ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் வைத்து சைதாப்பேட்டை காவல்துறையினர் கைது செய்தனர்.
நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்த மகா விஷ்ணு இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி ஆஜர்படுத்தபட்டார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம், மகா விஷ்ணுவை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்தது.
காவல்துறை விசாரணை முடிந்து இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகா விஷ்ணு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மேலும் 7 நாட்கள் வரும் செப்டம்பர் 20ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.