“பாஜகவுடன் உடனடியாக கூட்டணி அமைக்க வேண்டும்!” மீண்டும் வலியுறுத்தும் சைதை துரைசாமி!

பாஜக தயவில் தான் அதிமுக ஆட்சி செய்தது என சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி கூறியுள்ளார். 

Saidai duraisamy

சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார்.  அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும். அனைத்திற்கும் தீர்வு உண்டு. அதிமுக – பாஜக கூட்டணியை உடனடியாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு கருத்துக்களை கூறினார்.

அவர் கூறுகையில், இது எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி, இதனை காப்பாற்ற என்ன செய்ய வேண்டும் என தெரிய வேண்டும். இப்போது ஆட்சியில் அதிமுக இல்லை. அதிமுகவில் அனைத்து தலைவர்களையும் ஒருங்கிணைத்தால் தான் அதிமுகவை காப்பாற்ற முடியும். பிளவு பட்டுவிட்டது என்ற சொல்லை நீக்கினால் தான் அதிமுக மீண்டு வரும். எல்லா மத, சாதிகளையும் ஒருங்கிணைத்த தலைவர் தான் எம்ஜிஆர் ஜெயலலிதா. அவர்கள் தான் வழிகாட்டி.

அவர்கள் காட்டிய வழியின் படி கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும். இது உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற தீர்வு. இதனை ஆய்வு செய்தாலே எதனை செய்ய வேண்டும் எதனை செய்ய கூடாது என தெரிந்து விடும். அதிமுக நீடிக்க வேண்டும் என்றால் எதனை அடிப்படையாக கொண்டு இளைஞர்கள் வருவார்கள்? பேச்சாற்றல், எழுத்தாற்றல், திராவிடம் இதனை வைத்து தான் வருவார்கள். எம்ஜிஆர் உருவாக்கிய கட்சியில் அவரே எல்லோரையும் அனுசரித்து சென்றார். தற்போதைய தலைவர்களும் அதனை செய்ய வேண்டும்.

உடனடியாக கூட்டணி குறித்த முடிவு எடுக்க வேண்டும். கட்சியை காப்பாற்ற வேண்டும். தேர்தல் களத்தில் பாஜகவோடு கூட்டணியை உருவாக்க வேண்டும். பாஜக தயவில் தான் அதிமுக ஆட்சி செய்த்தது. அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும். வெற்றிக்கு என்ன தேவையோ அதனை செய்ய வேண்டும். எனக்கு எந்த பதவியும் வேண்டாம். உங்களுக்கு நான் உறுதுணையாக இருப்பேன். எடப்பாடி பழனிச்சாமி எடுக்கும் முடிவுக்கு நான் வலுசேர்ப்பேன்.

தீர்வு இல்லாத பிரச்சனையே இல்லை. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்றால் நம் உயரம் என்ன, நம் தகுதி என்ன என்பதை பார்க்க வேண்டும். அதிமுக தலைவர்கள் மட்டும் பேசினால் மக்கள் வருவார்களா? பிறகு எப்படி இந்த கட்சி நிலைக்கும்? ஊர்கூடி தேர் இழுக்க வேண்டும். தேரை இழுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அதிமுகவினர் அறிய வேண்டும் என சைதை துரைசாமி பேசியுள்ளார்.

இதற்கு முன்னர் இதேபோல அதிமுக – பாஜக கூட்டணி அமைக்கப்பட வேண்டும் என சைதை துரைசாமி கூறியதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, சைதை துரைசாமிக்கு வேறு வேலைவெட்டி இல்லை. பல்வேறு கட்சி தலைவர்களுடன் அவருக்கு தொடர்பு இருக்கிறது. அந்த தொடர்பின் வாயிலாக மற்றவர்களை திருப்திபடுத்துவதற்காக சில கருத்துகளை சைதை துரைசாமி கூறி வருகிறார் என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்