ஆண்களுக்கு சபரிமலை… பெண்களுக்கு மேல்மருவத்தூர்… பங்காரு அடிகளாரின் ஆன்மீக நகர்வுகள்.!
ஆன்மீகவாதிகள் மத்தியில் ஆதிபராசக்தியின் மறு உருவமாகவும், பக்தர்களால் “அம்மா” என்று அன்போடு அழைக்கப்படுவோருமான மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் நேற்று மாலை உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்த செய்தி பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இவரது மறைவை அறிந்தவுடன் திராவிட கொள்கை பேசும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் ஆன்மீக சிந்தனை கொண்ட பிரதமர் மோடி வரை பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பலர் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர். அரசு முறையில் பங்காரு அடிகளார் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அரசு அறிவிக்கிறது.
பங்காரு அடிகளார் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி..!
இப்படியான பல தலைவர்கள் ஒன்றிணைந்து இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஆன்மீகத்தில் என்ன செய்தார் என ஒருசிலருக்கு ஐயம் தோன்றி இருக்கும். உண்மையில் பெண்களுக்கான ஆன்மீக உரிமையை பெற வைத்தார் பங்காரு அடிகளார். அதன் வெளிப்பாடு தான் இன்று லட்சகனாக்கான பெண்களின் அழுகுரல் இங்கு வரை கேட்கிறது.
பெண்கள் கருவறை செல்ல கூடாது. மாதவிடாய் காலத்தில் பெண்கள் கோவிலுக்குள் மட்டுமல்ல, வீட்டில் நடைபெறும் தெய்வ காரியங்களில் கூட ஈடுபட கூடாது என ஒதுக்கிவைக்கப்பட்ட போது 1980களிலேயே இதனை உடைத்தெறிந்தவர் பங்காரு அடிகளார்.
ஆரம்ப காலத்தில் ஆசிரியராக பணியாற்றி, திருமணம் செய்து கொண்டு வாழ்ந்திருந்த பங்காரு அடிகளார் , அதன் பின்னர் ஆன்மீக பாதைக்கு திரும்பி தன்னை ஆதிபராசக்தியின் மருஉருவம் என அறிவித்துக்கொண்டார். அதன் பின்னர் 1978இல் காஞ்சிபுரத்தில் ஆதிபராசக்தி ஆன்மீக மன்றத்தை ஆரம்பித்தார். 1980 காலகட்டத்தில் பெண்கள் அனைத்து நாட்களிலும் கோவிலுக்கு வரலாம். கருவறை வரை சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்யலாம் என அறிவித்து அதனை செயல்படுத்தினார்.
இந்த புரட்சி தமிழகம் தாண்டி எதிரொலித்தது. இவரது புகழ் கிராமப்புறம் வரை சென்றது. அதன் பிறகு ஆதிபராசக்தி கோவிலுக்கு மக்கள் , குறிப்பாக பெண்கள் கூட்டம் அதிகமாக தொடங்கியது. குறிப்பாக சபரிமலைக்கு ஆண்கள் இருமுடி கட்டி செல்வது போல , மேல்மருவத்தூருக்கு பெண்கள் இருமுடி கட்டி செல்வார்கள்.
ஜனவரி மாத தைப்பூச திருவிழாவை ஒட்டி, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு வரும் பக்தர்கள் டிசம்பர் மாதேமே மாலை அணிந்து விரதம் இருந்து வருவர், பின்னர் ஆண்கள் சபரிமலை ஐயப்பன் கோவில் செல்வது போல பெண்கள் இருமுடி கட்டி மேல்மருவத்தூர் கோவிலுக்கு சுமந்து செல்வார்கள். அங்கு சுயம்பு அன்னைக்கு அவர்களே அபிஷேகம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கார்த்திகை மாதம் 1ஆம் தேதி முதல் மலை அணிந்து ஒரு மண்டலம் 48 நாட்கள் விரதம் இருந்து இருமுடி சுமந்து சபரிமலை ஐயப்பனை தரிசிப்பார்கள். இந்த கோவிலுக்கு ஆண்கள் மட்டுமே வருவதற்க்கு அனுமதியளிக்கப்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.