வதந்தி வீடியோ..! யூடியூபர் மணீஷ் காஷ்யப்பை பீகார் சிறைக்கு அனுப்ப உத்தரவு..!
வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவது தொடர்பாக போலியான தகவல் பரப்பிய யூடியூபர் மணீஷ் காஷ்யப்பை பீகார் சிறைக்கு அனுப்ப உத்தரவு.
தமிழ்நாட்டில் வெளிமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோ சமூக வலை தளங்களில் கடந்த சில நாட்கள் முன்பு பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநில அரசியல் கட்சியினர், இது குறித்து பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என கூறிவந்தனர்.
பீகாரில் இருந்து வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய, தமிழ்நாட்டிற்கு ஆய்வுக்குழுவும் அனுப்பப்பட்டது. மேலும் தமிழக காவல்துறையும் இந்த போலி வீடியோ குறித்து விளக்கம் அளித்திருந்தது, இந்த வீடியோ வேறு மாநிலங்களில் நடந்த பழைய வீடியோ என்றும், இது முற்றிலும் உண்மையில்லை.
மேலும், இது போன்று தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவது போன்ற போலி வீடியோக்களை பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்ட யூடியூபர் மணீஷ் காஷ்யப், பீகாரின் மேற்கு சம்பாரனில் காவல்துறையில் சரணடைந்தார்.
இதையடுத்து, மதுரை மாவட்ட காவல்துறையினர் மனிஷ் காஷ்யப்பை விசாரணைக்காக தமிழகம் அழைத்து வந்து மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அப்பொழுது காஷ்யப்பை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, காவல் முடிந்து மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்நிலையில், காஷ்யப்பை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். மேலும், வதந்தி வீடியோ பரப்பியதாக கைதான மனிஷ் காஷ்யப்பை தமிழக காவல்துறை பாதுகாப்புடன் பீகார் சிறைக்கு அனுப்ப மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.