ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்ட வேண்டாம் – கமல்ஹாசன்
கொரோனா 2வது அலையில் குழந்தைகளும் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பது கொடுமை என கமல்ஹாசன் அறிக்கை.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை. ஆக்சிஜன் இல்லை. ரெம்டெசிவர் மருந்து இல்லை. தடுப்பூசிகள் இல்லை. ஆபத்து என அழைத்தால் பிரதமர் அலுவலகத்தில் பிரதமரும் இல்லை என்பதே கசப்பான நிதர்சனம் என தெரிவித்துள்ளார்.
கொரோனாவின் இரண்டாம் அலை கடும் தீவிரம் அடைந்து வருகிறது. இந்தியா விரைவில் முதலிடம் பிடித்துவிடும் என நிபுணர்கள் கணிக்கிறார்கள். பெரிய தலைவர்கள் முதல் கடைக்கோடி மனிதர்கள் வரை நாளுக்கு நாள் தொற்று காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. இந்த இரண்டாவது அலையில் குழந்தைகளும் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்பது கொடுமையிலும் கொடுமை.
கொரோனா தடுப்பூசிகள் எடுத்துக்கொண்டபின் உடல்நிலையில் ஏற்படும் ஆபத்தற்ற பக்கவிளைவுகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால், தடுப்பூசி குறித்த அச்சமும் பரவலாக நீடிக்கிறது. உலகமே மருந்துக்குத் திண்டாட ஏப்ரல் 11-ம் தேதி வரை தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய 54 லட்சத்து 28 ஆயிரத்து 950 தடுப்பூசிகளில் 12.10% வீணாகியுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கிடைத்திருக்கும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.
மேலும், மாநில அரசுகள் மருந்து கொள்முதல் செய்வதில் முழுச் சுதந்திரம் இன்னமும் அளிக்கப்படவில்லை. தீர்வுகளைத் தரமுடியாதவர்கள் அதிகாரத்தை மட்டும் கையில் வைத்திருப்பது கேலிக்குரியது. ஆளாளுக்கு அரசியல் செய்யும் நேரம் இதுவல்ல என்பதைப் புரிந்துகொண்டு முன் நகர வேண்டும். ஆட்சியாளர்களே, அலட்சியம் காட்டாதீர் என தெரிவித்துள்ளார்.