ஆர்.எஸ்.எஸ் பேரணி – தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேரணிக்கு அனுமதியளித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல்
தமிழகத்தில் கடந்த காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் பேரணி நடத்த காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தனி நீதிபதி உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 44 இடங்களில் உள்ளரங்க நிகழ்வாகவும், 6 இடங்களில் ஊர்வலமாகவும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை நடத்தி கொள்ளலாம் என அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால்,ஆர்.எஸ்.எஸ் தரப்பில் பொதுவெளியில் நடத்த அனுமதி அளிக்குமாறும், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யுமாறும் மேல்முறையீடு செய்யப்பட்டது.
பேரணி நடத்த அனுமதி
இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, கடுமையான ஒழுங்குகளுடன் பேரணி நடத்த அனுமதிக்க வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தும் ஆணையிடப்பட்டது. மேலும், அணிவகுப்புக்கு அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பங்களை சட்டப்படி பரிசீலித்து முடிவெடுக்கவும் காவல் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
டிஜிபிக்கு நோட்டிஸ்
பிப்ரவரி 12, 19, மார்ச் 5 தேதிகளை பரிந்துரை செய்து, பிப்ரவரி 11ஆம் தேதி தமிழக டிஜிபி மற்றும் அந்தந்த பகுதி காவல்துறை அதிகாரிகளிடம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் விண்ணப்பித்தனர். ஆனால் அவற்றில் முதல் இரண்டு தேதிகள் முடிந்துவிட்ட நிலையில், மார்ச் 5ஆம் தேதி அணிவகுப்பு பேரணி நடத்த அனுமதி அளிக்கும்படி நேற்று டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மார்ச் 5-ஆம் தேதி அணிவகுப்பு பேரணி நடத்த அனுமதி அளிக்கும்படி நேற்று டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், இன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேரணிக்கு அனுமதியளித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.