ஆர்.எஸ்.எஸ் பேரணி! முழு அதிகாரம் அரசுக்கு தான்.. நீதிமன்றம் தலையிட முடியாது – தமிழ்நாடு அரசு வாதம்
ஆர்எஸ்எஸ் பேரணிக்கு உயர்நீதிமன்றம் அளித்த அனுமதிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்.
நீதிமன்றம் தலையிட முடியாது:
ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பேரணிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடந்த மேல்முறையீட்டு மனு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது, உளவு துறை தகவல் அடிப்படையில் ஒரு நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்குவது மறுப்பது அரசின் உரிமை சார்ந்த விஷயம், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தமிழ்நாடு அரசு வாதம் முன்வைத்துள்ளது.
சென்சிட்டிவான விஷயம்:
ஆர்எஸ்எஸ் பேரணியை அனுமதிப்பது என்பது மிகவும் சென்சிட்டிவான விஷயம், பேரணி விவகாரத்தில் முடிவெடுக்க கூடிய முழு அதிகாரமும் அரசுக்குத்தான் உள்ளது. நிலைமையை கருத்தில் கொண்டு மைதானம் உள்ளிட்ட இடங்களில் பேரணி நடத்த அனுமதி தரப்பட்டது. முழுமையாக தடை விதிக்கவில்லை, ஏராளமான பிரச்சனைகள் உள்ள இடங்களில் தான் பேரணி நடத்த மறுக்கப்பட்டது எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் வாதம்:
உளவு துறையின் எச்சரிக்கைகளை அப்படியே கடந்து செல்ல முடியாது என்றும் கோவை வெடி குண்டு தாக்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டு வருகிறது. தமிழ்நாட்டின் 50 மாவட்டங்களில் எங்களது பேரணியை அரசு தடுத்து நிறுத்தியுள்ளது என ஆர்எஸ்எஸ் அமைப்பு கூறியுள்ளது. என்னது, தமிழ்நாட்டில் 50 மாவட்டங்களா? நான் கேள்விப்பட்டதே இல்லை என தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் சிரித்தபடியே பதில் அளித்ததாக தகவல் கூறப்படுகிறது.
தமிழக அரசு மேல்முறையீடு:
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி, தமிழக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. ஐகோர்ட் அனுமதிக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்ததது. தற்போது இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.