முத்து மனோ குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணத் தொகை அறிவித்த முதல்வர்..!

Default Image

மத்திய சிறையில் உயிரிழந்த முத்து மனோ குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணத் தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 

திருநெல்வேலி மாவட்டம் வாகைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து மனோ. இவர் ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்ததாக களக்காடு காவல்துறையால் கைது செய்யப்பட்டு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைக்கப்பட்டார். பின் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி மற்றொரு வழக்கில் நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அங்கு சக கைதிகளால் தாக்கப்பட்ட முத்து மனோ அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த கொலை வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. சிறையில் நடந்த மோதலில் இறந்த கைதி முத்து மனோ உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய சிறையில் உயிரிழந்த முத்து மனோ குடும்பத்திற்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ. 10 லட்சம் நிவாரணத் தொகையை அறிவித்துள்ளார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், பூலம் குறுவட்டம், பூலம் பகுதி 2 கிராமம், கருணாநிதி தெரு, வாகைகுளம் என்ற முகவரியில் வசிக்கும் திரு.பாவநாசம் என்பவரின் மகன் முத்துமனோ (வயது 27) என்பவர் 22-4-2021 அன்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் இறந்துள்ளார். இந்நிகழ்வு தொடர்பாக பெருமாள்புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இச்சம்பவத்தில் உயிரிழந்த திரு முத்துமனோ அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் உயிரிழந்த திரு முத்துமனோ அவர்களின் குடும்பத்தினரின் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அவரது குடும்பத்திற்கு பத்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவத்திற்கு காரணமான பாளையங்கோட்டை சிறைச்சாலைப் பணியாளர்கள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் தற்பொழுது வழக்கானது குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு (CBCID) மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவின் அடிப்படையில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்