வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் உள்ளது – நிர்மலா சீதாராமனுக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி!
டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்திற்கான வெள்ள நிவாரண நடவடிக்கை தொடர்பாக பேசி விளக்கம் அளித்தார். அப்போது சென்னையில் ரூ. 4000 கோடி செலவிட்டு மழை நீர் வடிகால் அமைத்ததாக அமைச்சர் கூறினாரே என்னவானது..? 4000 கோடியில் 45 சதவீதம் மட்டும் செலவழித்து விட்டு 92 சதவீதம் செலவழித்ததாக கூறியது ஏன்..? மழைக்கு முன் 92 சதவீதம் வடிகால் பணி முடிந்ததாக கூறினார்.
மழைக்கு பின் 42 சதவீதம் பணிகளை நிறைவு என மாற்றிப் பேசினார் ஏன் என நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினார்?. இந்த நிலையில், ரூ4000 கோடி எங்கே போனது என்ற நிர்மலா சீதாராமனின் கேள்விக்கு திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர்களின் சந்திப்பின் மூலம் பதில் அளித்து இருக்கிறார்.
இது குறித்து பேசிய ஆர்.எஸ்.பாரதி ” எந்த காலத்திலும் நிர்மலா சீதாராமன் சார்ந்து இருக்கக்கூடிய கட்சி உண்மையை பேசியது இல்லை. அதனை வைத்து நான் சொல்ல வருவது நிர்மலா சீதாராமன் இப்போது சொன்ன எல்லா விஷயமும் பொய் தான். தமிழ்நாட்டை சேர்ந்தவர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எனவே, அவர் இன்னும் கூடுதலாக தமிழ்நாட்டுக்கு நிதி வாங்கித்திருந்த வேண்டும். அப்படி செய்யாதது எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் வருத்தமாக இருக்கிறது.
அதைப்போல, அவர் இப்படியெல்லாம் பேசுவது பேசுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதை போல இருக்கிறது. இந்த நேரத்தில் அரசியல் பற்றி பேசுவது எல்லாம் சரியான விஷயம் இல்லை. ஏனென்றால், இது அரசியல் பேசுவதற்கான நேரமில்லை. தமிழ்நாட்டு மக்கள் பலரும் பல மாவட்டங்களில் இருப்பவர்கள் வெள்ளத்தால் தத்தளிக்கிறார்கள்.
ஒன்றிய அரசு குஜராத்திற்கு மட்டும் எதுவுமே கேட்காமலேயே நிதி உதவி செய்கிறது. அப்படி இருந்தும், தமிழ்நாட்டுக்கு நிதி உதவி கேட்ட பிறகும் போதுமான நிதி வழங்காததற்கான காரணம் என்ன? கோடி பணங்கள் என்ன ஆனது என்பதை மனசாட்சி இருப்பவர்களுக்கு நன்றாக தெரியும். சென்னைக்காக செலவு செய்த தொகை 4,000 கோடி. இந்தத் தொகை செலவிடாமல் இருந்திருந்தால் இந்த சமயத்தில் சென்னை காப்பாற்றப்பட்டிருக்காது” எனவும் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.