பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஆர்எஸ் பாரதி கண்டனம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணத்தை விமர்சித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஆர்எஸ் பாரதி கண்டனம்.
விருதுநகர் பெண் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சமீபத்தில் நடந்த பாஜக ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போதும் துபாய்க்குத் தனியே செல்லவில்லை. அவருடன் ஒரு பட்டாளமே சென்றுள்ளது. முதல்வரின் துபாய் பயணத்தையொட்டி, ரூ.5 ஆயிரம் கோடி அங்கு பறந்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன.
துபாயில் நடைபெறும் விழாவில் தமிழகம் சார்பிலான அரங்கைத் திறந்து வைக்க எதற்கு அவ்வளவு பணம்? என்று காட்டமான கேள்வியுடன் விமர்சித்தார். திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பாஜக திமுக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுக அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணத்தை விமர்சித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஆர்எஸ் பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். திமுகவின் ஆர்எஸ் பாரதி கூறுகையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் துபாய் பயணத்தை, சொந்த பணத்தை முதலீடு செய்ய சென்றிருப்பதாக கூறுகிறார் அண்ணாமலை.
முதலமைச்சரை விமர்சித்த அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவரிடம் ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். நோட்டீஸ் அனுப்பிய 24 மணிநேரத்திற்குள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்கவில்லை என்றால் கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு தொடரப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.