ஹெக்டருக்கு ரூ.75,000.. விவசாயிகளுக்கும், பொதுமக்களும் இழப்பீடு – ஓபிஎஸ் வலியுறுத்தல்!

Default Image

வடகிழக்கு பருவ மழையினால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஹெக்டருக்கு ரூ.75,000 வழங்க வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தல்.

தமிழ்நாட்டில் மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் பொதுமக்களும் இழப்பீட்டினை உயர்த்தி வழங்க திமுக அரசுக்கு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை துவங்கியதிலிருந்து பெரும்பாலான இடங்களில் கனமழை முதல் அதிகன மழை பெய்து வருகிறது.

கடந்த இரண்டு நாட்களாக கடலூர், மயிலாடுதுறை, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகரித்து அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதோடு, பயிர்களும் மூழ்கிப் போய் விவசாயிகளின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது.

அதி கனமழை பெய்ததன் விளைவாக விவசாய நிலங்களில் தேங்கியிருந்த தண்ணீர் வடிந்து வந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் வரலாறு காணாத அளவுக்கு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஒரே நாளில் 44 செ.மீ. அளவுக்கு மழை பெய்ததால், ஒரு இலட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பில் பயிரிடப்பட்ட அனைத்து பயிர்களும் தண்ணீரில் மூழ்கிப் போயுள்ளன.

சீர்காழி, கொள்ளிடம், செம்பனார்கோயில், தரங்கம்பாடி உள்ளிட்ட பல இடங்களில் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்படும் என்று வேளாண் துறை அதிகாரிகளே தெரிவிக்கும் அளவுக்கு பயிர்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. இதே நிலைமை தான் கடலூர் மாவட்டத்திலும் நிலவுகிறது. பல இடங்களில் வீடுகளிலும், வழிபாட்டு தலங்களிலும் தண்ணீர் புகுந்துள்ளது.

மழைநீர் புகுந்ததன் காரணமாக மாணவ, மாணவியரின் பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்து உடைமைகளும் பறிபோய்விட்டதாகவும், பெரும்பாலான வீடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. பாதிக்கப்பட்ட பொதுமக்களும், விவசாயிகளும் உரிய இழப்பீடு தரப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். 2020-ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை பெய்தபோது, பாதிக்கப்பட்ட நெற் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.75,000 வழங்கப்பட வேண்டும் என அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.கஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

தற்போது அவரே முதலமைச்சராக வந்துள்ள நிலையில் அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாய பெருமக்களிடையே பரவலாக உள்ளது. விவசாயிகள் மற்றும் பொதுமக்களுடைய நியாயமான எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசிற்கு உண்டு.

முதலமைச்சர் இதில் உடனடியாக தனிக் கவனம் செலுத்தி, பெரும்பாலான இடங்களில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அகற்றவும், மின்சார இணைப்பு வழங்கப்படாத கிராமங்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கவும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது விடுத்த கோரிக்கைக்கு ஏற்ப நெற் பயிருக்கான இழப்பீட்டினை ஹெக்டேருக்கு 75,000 ரூபாயாக அதிகரிக்கவும், இதர இழப்பீட்டுத் தொகைகளை தற்போதுள்ள விலைவாசிக்கு ஏற்ப குறைந்தபட்சம் இரண்டு மடங்கு உயர்த்தி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திவதாக தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்