ரூ.50 லட்சம் நிவாரணம்.! குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை – முதல்வர் அறிவிப்பு.!
உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணமாகவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு.
திருச்சி ஸ்ரீரங்கம் வட்டம் சிறுகமணி மேற்கு கிராமத்திலுள்ள சேதுரப்பட்டி அரசினர் பொறியியல் கல்லூரியில், விமானம் மூலம் வெளிநாட்டிலிருந்து வந்த பயணிகள், தனிமைப்படுத்தப்பட்டு அங்கு தங்கவைக்கப்பட்டிருந்தனர். அவர்களை கண்காணிக்கும் பணியிலிடப்பட்டிருந்த கிராம நிர்வாக அலுவலர் குமார் என்பவர் கடந்த 13 ஆம் தேதி அன்று தன்னுடைய பணியை முடித்து வீடு திரும்பும்போது மதுரை – சென்னை நெடுஞ்சாலையில் தனியார் வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை அளித்தது.
இதுகுறித்து முதல்வர் பழனிசாமி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், எதிர்பாரா விபத்தில் உயிரிழந்த கொரோனா வைரஸ் பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் குமார் அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் அவரது குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணமாகவும், குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலையும் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
எதிர்பாரா விபத்தில் உயிரிழந்த கொரோனா வைரஸ் பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் திரு.குமார் அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்!
அவரது குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணமாகவும், குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலையும் வழங்க உத்தரவிட்டுள்ளேன். pic.twitter.com/F4W0odaySe
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) May 15, 2020