ரூ.4,620 கோடி மோசடி – ஹிஜாவு நிதி நிறுவன இயக்குநர் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்!
ஹிஜாவு நிதி நிறுவன மோசடி வழக்கில் துணை நிறுவனத்தின் இயக்குநரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சுமார் ரூ.4,620 கோடி மோசடி வழக்கில் ஹிஜாவு நிதி நிறுவன முக்கிய நிர்வாகி கலைச்செல்விக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது, அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கிய ஹிஜாவு நிறுவனம் 15% வட்டி உள்ளிட்ட கவர்ச்சிகர திட்டங்களை கூறி சுமார் ரூ.4,620 கோடி முதலீடுகளை ஈர்த்து மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஹிஜாவு நிதி நிறுவனம் மீதும் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு தொடர்ந்துள்ளது.
பொதுமக்களிடம் சுமார் ரூ.4,620 கோடி முதலீடுகளை பெற்று மோசடி செய்த வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இவ்வழக்கில் ஹிஜாவு நிதி நிறுவன இயக்குநர் அலெக்ஸாண்டர் உள்பட 15 பேர் தலைமைறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வழக்கில் கைது செய்யப்பட்ட துணை நிறுவனத்தின் இயக்குனர் கலைச்செல்வி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். மீட்க வேண்டிய தொகை அதிகமாக உள்ளதாலும், 16,500 பேரிடமிருந்து புகார்கள், 40 பேர் மீது வழக்கு என கூறி ஜாமீன் வழங்க காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயார்நீதிமன்றம்.