ஒரு கிலோ நத்தை ரூ.400! போட்டிபோட்டு வாங்கும் பொதுமக்கள்!
நத்தை என்றாலே அருவருப்பாக பார்க்கின்ற மக்கள் மத்தியில், அதையும் பணம் கொடுத்து போட்டி போட்டு வாங்குபவர்களும் இருக்கிறார்கள். தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் என்ற பகுதியில், தற்போது மழை பெய்து வருவதால், மருத்துவ குணம் கொண்ட நத்தை சீசன் துவங்கியுள்ளது.
இந்த நத்தைகள் பொதுவாக ஏரி, குளங்களில் நீர் வடியும் பகுதிகளில் நீரை சேமித்துக் கொண்டு பூமிக்கு அடியில், உயிர் வாழும். இந்நிலையில், மருத்துவகுணம் கொண்ட நத்தைகளின் சீசன் துவங்கி உள்ளதால், நத்தை பிடிக்கும் பணியில் அந்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இந்த நத்தை ஏராளாமான மருத்துவ குணம் கொண்டுள்ளது என்பதால், பொதுமக்களும் இதனை விரும்பி வாங்குகின்றனர். கூடு உடைக்காமல் விற்பனை செய்யப்படும் நத்தைகள் ஒரு கிலோ ரூ.400-க்கும், கூடு உடைக்கப்பட்ட நிலையில் உள்ள நத்தைகள் ஒருகிலோ ரூ.600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நத்தையில் உள்ள மருத்துவகுணம் என்னவென்றால், நீண்ட நாட்களாக உள்ள இடுப்பு வலி, பெண்களுக்கு வரும் உஷ்ணம் மற்றும் மூலம் சம்பந்தமான வியாதிகளை குணப்படுத்துகிறது. இதனால், பொதுமக்களும் போட்டிபோட்டு வாங்குகின்றனர்.