வேலை வாங்கி தருவதாக ரூ.35 லட்சம் பணமோசடி..!-அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர் கைது..!
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 18 பேரிடம் ரூ.35 லட்சம் பணம் மோசடி செய்த முன்னாள் அதிமுக அமைச்சரின் உறவினரை கைது செய்துள்ளனர்.
அதிமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த சரோஜாவின் அக்காள் மகன் ரமேஷ்பாபு. இவர் சென்னை அசோக் நகரை சேர்ந்தவர். இவரது வயது 45. விழுப்புரம் மாவட்டம் கடையம் கிராமத்தை சேர்ந்த குணசேகரனுக்கு, கடந்த 2018 ஆம் ஆண்டு பொன்னங்குப்பத்தை சேர்ந்த பாக்யராஜ் என்பவர் மூலமாக ரமேஷ்பாபு அறிமுகமாகியுள்ளார். அப்போது ரமேஷ் பாபு, அமைச்சரான தனது சித்தியின் மூலமாக அரசுப்பணி பெற விரும்பினால் அரசு பணிக்கு தகுந்தவாறு குறிப்பிட்ட பணத்தை வாங்கிக்கொண்டு உறுதியாக வேலை கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு கூறியுள்ளார்.
இந்த வார்த்தைகளை நம்பி 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் மார்ச் மாதம் வரை உறவினர்கள் தெரிந்தவர்கள் என மொத்தம் 18 பேருக்கு சத்துணவு அமைப்பாளர், அங்கன்வாடி பணியாளர், கிராம உதவியாளர் போன்ற அரசு பணிக்கு பணம் கொடுக்க முன்வந்துள்ளார். அதன் படி, ரமேஷ் பாபு அரசுப்பணிக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட தொகையை அவரது வங்கி கணக்கிலும், முதல் மனைவி, இரண்டாம் மனைவி, இவரது மாமா வங்கி கணக்கிலும், பின்னர் நேரடியாக இரண்டாவது மனைவி மற்றும் ரமேஷ் பாபுவிடனும் ரூ.35 லட்சம் வரை கொடுத்துள்ளார்.
ஆனால், பணத்தை பெற்றுக்கொண்டு அரசு வேலை வாங்கி தராமல் ரமேஷ் பாபு காலம் தாழ்த்திக்கொண்டு இருந்துள்ளார். இதனால், பலமுறை குணசேகரன் தொலைபேசி வாயிலாகவும் நேரடியாகவும் சென்று வேலை வாங்கி தாருங்கள் இல்லையெனில் பணத்தை திரும்ப கொடுங்கள் என்று கூறியுள்ளார். இதற்கு ரமேஷ் பாபு எந்தவொரு செயலையும் செய்யாமல் இருந்துள்ளார். இதனை அடுத்து கடந்த மார்ச் மாதம் 20 ஆம் தேதி தொலைபேசியில் ரமேஷ் பாபுவிடம் பேசியுள்ளார். அதற்கு ரமேஷ் பாபு பணம் வாங்கிய விவரம் குறித்து யாரிடமும் கூறினால் குடும்பத்தோடு கொன்றுவிடுவதாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதன் பின்னர், குணசேகரன் விழுப்புரம் மாவட்டம் போலீஸ் சுப்பிரண்ட் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து வழக்கு பதிவு செய்து பணம் மோசடி, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் ரமேஷ் உட்பட 4 பேரை விசாரணை செய்துள்ளனர். இதன் பின்னர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரன் தலைமையில் ரமேஷ் பாபுவை கைது செய்தனர். பின்னர் அவர் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.