கொரோனா தடுப்பூசி போட்டால் ரூ.200 வழங்கப்படும்…! தடுப்பூசி முகாமில் குவிந்த மக்கள்…!
கடலூர் மாவட்டம், பாத்திக்குப்பம் பகுதியில், கொரோனா தடுப்பூசி போட்டால் ரூ.200 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து, தடுப்பூசி முகாமில் குவிந்த மக்கள்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, கடலூரில் 909 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அங்கு பாத்திக்குப்பம் ஊராட்சியில், தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் யாரும் வராத காரணத்தால், மக்களை ஊக்குவிக்கும் வண்ணம், ஊராட்சி நிர்வாகம் சார்பில், தடுப்பூசி செலுத்தி கொள்ளும் ஒவ்வொரு நபருக்கும் ரூ.200 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, ஒவ்வொருவராக வந்து தடுப்பூசி செலுத்தி வந்த நிலையில், இந்த தகவல் ஊராட்சி பகுதி முழுவதும் பரவியது. கடலூர் மாவட்டம் முழுவதும் இன்று 65,000 பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.