ஆவுடையார் கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு நிதி எவ்வளவு? முதல்வர் ஸ்டாலின் பதில்!
2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை 72 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை : தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் இன்று காலை வழக்கம் போல தொடங்கியுள்ளது. இதில் உறுப்பினர்களின் கேள்விக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். நேற்றைய கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி பற்றி பேசி இருந்தார்.
அதனை தொடர்ந்து இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், ஆவுடையார்கோவிலில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையத்திற்கு புதிய கட்டடம் எப்போது கட்டப்படும், அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா என அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.
அந்த கேள்விக்கு பதில் அளித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்தார். இது குறித்து பேசிய அவர் ” ஆவுடையார்கோவிலில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்காக ரூ.2.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கட்டடப் பணிகள் வரும் மே மாதத்தில் தொடங்கப்படும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பணிகள் முடிவடைந்து, அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி மாதத்தில் இந்த தீயணைப்பு நிலையக் கட்டடம் திறக்கப்படும்” என அறிவித்தார்.
அதனை தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ” 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை 72 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதே சமயம் 23 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் அறிவிக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன. அது மட்டுமின்றி, காவல்துறை மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படும் போது சட்டமன்ற உறுப்பினர்கள் திருப்தியடையும் வகையில் அறிவிப்புகள் வரும்” எனவும் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.