ஆரணியில் ரூ.2.39 கோடி போலி நகைக்கடன் – கூட்டுறவுத்துறை அதிரடி நடவடிக்கை!
ஆரணி கூட்டுறவு நகர வங்கியில் போலி நகைகள் வைத்து ரூ.2.39 கோடி அளவில் கடன் பெற்று மோசடி என கூட்டுறவுத்துறை தகவல்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கூட்டுறவு நகர வங்கியில் சுமார் ரூ.2.39 கோடி அளவில் 77 நபர்களுக்கு போலி நகைக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன என்று கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.
போலி நகைக்கடன் வழங்க உறுதுணையாக இருந்த வாங்கி பணியாளர், நிர்வாக குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 3 பேர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்காலிக நீக்கம் செய்து கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
நகைக்கடன்கள் குறித்து ஆய்வு செய்து திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி இணைப்பதிவாளர் கூட்டுறவுத்துறைக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார். கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குட்பட்ட நகைக்கடன் முறைகேடை தொடர்ந்து பொது நகைக்கடன்களில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்த, வங்கியில் ஏதேனும் முறைகேடு உள்ளதா என்று ஆய்வு செய்ய, ஏற்கனவே தமிழக அரசு குழு அமைப்பு ஆய்வு மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.