BREAKING: “தாக்கப்பட்ட சுங்கச்சாவடியில் ரூ.18 லட்சம் காணவில்லை”என புகார்.!
- கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே உள்ள பரனூரில் சுங்கச்சாவடியில் உள்ள 12 பூத்களும் பயணிகளால் சூறையாடப்பட்டது.
- சுங்கச்சாவடி மோதலின் போது ரூ.18 லட்சம் பணம் காணவில்லை என காவல் நிலையத்தில் சுங்கச்சாவடி பொறுப்பாளர் புகார் கொடுத்து உள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே உள்ள பரனூரில் சுங்கச்சாவடியில் திருச்சிக்கு சென்ற அரசு பேருந்து ஓட்டுனருக்கு , சுங்கச்சாவடி ஊழியருக்கு இடையே கட்டணம் செலுத்துவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
அப்போது அரசு பேருந்து ஓட்டுநரையும் , நடத்துநரையும் சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர் பேருந்தை சுங்கச்சாவடிக்கு குறுக்கே நிறுத்தி உள்ளார்.இதைத்தொடர்ந்து அங்கு 3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் கோவத்தில் சுங்கச்சாவடியில் இருந்த 12 பூத்களில் இருந்த கணினி உள்ளிட்ட பொருள்களை பயணிகள் அடித்து நொறுக்கினர்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் டிரைவர் , நடத்துனர் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள் என 4 பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்தனர்.இந்நிலையில் சுங்கச்சாவடி முழுவதும் சூறையாடப்பட்டதால் சேதம் அடைந்த பொருட்களை மாற்றி சரிசெய்ய ஒருவார காலம் ஆகும் என கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து கடந்த இரண்டு நாள்களாக வாகனங்களுக்கு கட்டண வசூல் செய்யாமல் இலவசமாக செல்கின்றனர்.இந்நிலையில் சுங்கச்சாவடி மோதலின் போது ரூ.18 லட்சம் பணம் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.
சம்பவத்தன்று மொத்தம் உள்ள 12 பூத்களில் இருந்தும் ,அலுவலகத்தில் இருந்தும் வசூலான ரூ.18 லட்சம் பணம் காணவில்லை என சுங்கச்சாவடி பொறுப்பாளர் புகார் கொடுத்து உள்ளார்.இந்த சுங்கச்சாவடியில் ஒரு நாளைக்கு ரூ.15 லட்சத்திற்கு மேல் வசூல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.