பழமையான கோவில்களை புனரமைப்பு செய்ய ரூ.125…தேவாலயங்களை சீரமைப்பதற்காக ரூ.10 கோடி!
ஆயிரம் ஆண்டு பழமையான கோயில்களுக்கு திருப்பணி ரூ.125 கோடி என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் மகளிர், மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள் பயன்படும் சில அம்சங்களும் இடம்பெற்று இருந்தது. 2.33 மணி நேரம் தொடர்ச்சியாக பேசி வந்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது பட்ஜெட் உரையை முடித்தார்.
பட்ஜெட்டில் பல அறிவிப்புகள் வெளியான நிலையில், அதில் முக்கிய அறிவிப்பாக, பழமையான பள்ளிவாசல், தர்காக்கள், தேவாலயங்களை சீரமைக்க ரூ.10 கோடி ஒதுக்கப்படுவதாக தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அதன்படி, ஆயிரம் ஆண்டு பழமையான கோவில்களை புனரமைப்பு செய்ய (திருப்பணி) ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதைப்போல, பிற மத வழிபாட்டு தலங்களான பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் தேவாலயங்களை சீரமைக்க ரூ.10 கோடி மானியமும் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பள்ளிவாசல்களின் சீரமைப்பு தொடர்பான குறிப்பிட்ட விவரங்கள் (எந்தெந்த பள்ளிவாசல்கள், எவ்வாறு சீரமைப்பு செய்யப்படும் போன்றவை) பட்ஜெட் உரையில் தனிப்பட்ட விவரமாக சொல்லப்படவில்லை. இத்தகைய நிதி ஒதுக்கீடுகள் அரசின் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அல்லது தொடர்புடைய மத விவகார அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்படும் என்பதால் வரும் காலங்களில் எங்கு எங்கு புனரமைப்பு நடைபெறும் என்பது தெரிய வரும்.